
ஜி-20 அமைப்பின் மாநாடு, இந்தோனேஷியாவின் பாலி நகரில் நேற்று, இன்று இரண்டு தினங்களாக நடைபெற்றது.

பிரதமர் மோடி, ஜோ பைடன், ஜஸ்டின் ட்ரூடோ, ஜி ஜின்பிங் உட்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். ரஷ்யா சார்பில் புதினுக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்துகொண்டார்.

இந்த மாநாட்டின் மூலம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தான் பதவியேற்ற நாளிலிருந்து முதன்முறையாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்தார்.

மாநாட்டில் சுகாதாரம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து உலக தலைவர்கள் கலந்துரையாடினர்.

“போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான பாதையைக் கண்டெடுக்க வேண்டும். உக்ரைன் மோதலை ராஜதந்திரம் மூலம் தீர்க்க வேண்டும்.” – மோடி

முதல்நாளில் இந்தோனேஷிய அதிபர் ஜோக்கோ விடோடோ(Joko Widodo) கொடுத்த இரவு விருந்தில், உலக தலைவர்கள் அனைவரும் கண்கவர் விளக்குகளின் வெளிச்சத்தில் கலர்ஃபுல் உடைகளில் வலம்வந்தனர்.

இரண்டாம் நாளில் ஜி-20 தலைவர்கள், பாலியில் உள்ள மாங்குரோவ் வனத்தில் செடிகள் நட்டு கலந்துரையாடினர்.

“உக்ரைன் போர், உலகப் பொருளாதாரத்தில் இருக்கும் பலவீனங்களை அதிகரிக்கிறது. பணவீக்கம் அதிகரிப்பு, நிதி ஸ்திரத்தன்மை, விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைத்தல், ஆற்றல் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை அபாயங்களை உயர்த்துகிறது” – ஜி-20 தலைவர்கள்

உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர ஜி-20 தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

“இன்றைய சகாப்தம் போராக இருக்கக்கூடாது!” – மோடி

இந்தோனேஷிய அதிபர் ஜோக்கோ விடோடோ கையால், ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை பிரதமர் மோடி இன்று பெற்றுக்கொண்டார்.