ஸ்கெட்ச் போட்டு பணத்தை பறிக்கும் இணைய தளங்கள்: மேட்ரிமோனி அலப்பறைகள்

* லட்சக்கணக்கில் பதிவு கட்டணம் வசூல்
* ஒரே பெண்ணின் போட்டோவை பலமுறை காட்டி மோசடி
* கடிவாளம் போடுமா ஒன்றிய அரசு

வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். ஏனென்றால் இரண்டுமே அவ்வளவு சிக்கல்கள் நிறைந்தது. எதிர்பாராத பல இடைஞ்சல்களை, சிக்கல்களை சந்திக்க நேரிடும். இன்றைக்கு திருமண ஏற்பாடுகளுக்கு அவ்வளவு மெனக்கெட தேவையில்லை. ஆள்பலமும் தேவையில்லை. பெண்ணோ, மாப்பிள்ளையோ கிடைத்தால் போதும், மண்டபம், சமையல், அலங்காரம் துவங்கி முதலிரவு கட்டில் அலங்காரம் வரை செய்து தருவதற்கு ஆட்கள், நிறுவனங்கள் இருக்கிறார்கள். அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ப எல்லாம் செய்து தந்து விடுவார்கள். ஆனால், நல்ல மணப்பெண், மணமகன் கிடைக்கணுமே. அது தான் பெரிய சிக்கல். அந்த சிக்கலை தீர்க்க வாராது வந்த மாமணியாக வந்தவைதான் இந்த மேட்ரிமோனி வெப்சைட்ஸ் எனப்படும் திருமண தகவல் இணைய தளங்கள். ஆனால், இந்த மேட்ரிமோனிகள் செய்யும் அலப்பறைகளால் பாதிக்கப்பட்டோர் ஏராளம்.

மேட்ரிமோனி இணைய தளங்களில் பதிவு செஞ்சி, சொந்த காசில் சூனியம் வச்சுக்கிட்டேன் என்று புலம்பிக்கொண்டிருந்தார் 30 வயதை கடந்த பின்னரும் முரட்டு சிங்கிளாக இருக்கும் 90ஸ் கிட் ஒருவர். ஒரு காலத்தில், திருமணத்துக்கு மாப்பிள்ளை அல்லது பெண் பார்க்க வேண்டும் என்றால், முதலில், உறவினர்களிடம் –  நண்பர்களிடம் சொல்லி வைப்பார்கள். அப்படியும் பொருத்தமான வரன் அமையாவிட்டால், நம் குடும்பத்துக்கு அறிமுகமான தரகரிடம் ஜாதக குறிப்பு வழங்கப்பட்டு வரன் தேடும் படலம் தொடரும். அதே நேரத்தில், நாளேடுகளில் மணமகள் தேவை, மணமகன் தேவை என்று விளம்பரம் செய்வார்கள்.

அப்படியும் வரன் கிடைக்காமல் திக்குமுக்காடியவர்களுக்கு ஆபத்பாந்தவனாக வந்ததுதான் திருமண தகவல் மையங்கள்.  ஊருக்கு ஒன்று, சாதிக்கு ஒன்று என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக புற்றீசல் போல் பரவ, 1990களின் இறுதியில் இன்டர்நெட் பரவல் இந்தியாவில் வேகமெடுக்க, ஆன்லைன் மேட்ரிமோனி இணையதளங்கள் பிறந்தன. திருமண தகவல் மையங்களும் ஆன்லைன் அவதாரம் எடுத்தன. பெண்களுக்கு பதிவு இலவசம், ஆண்களுக்கு மட்டும் கட்டணம் என்ற கவர்ச்சிகர அறிவிப்புகள் ஒருபுறம் மக்களை கவர்ந்திழுக்க மேட்ரிமோனி இணைய தளங்களின் வீச்சு கடந்த 25 ஆண்டுகளில் நகரங்களை கடந்து பட்டி, தொட்டிகள், கிராமப்புறங்களை அடைந்துள்ளது.

மேட்ரிமோனி இணைய தளங்களின் பதிவு கட்டணம் சில ஆயிரங்களில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை என்கிறது இன்டர்நெட் ஆய்வு. அதுவும் ஓராண்டுக்குதானாம். அதற்குள் பெண்ணோ, மாப்பிள்ளையோ கிடைக்கவில்லை என்றால் பணம் வாபசாகுமா என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை. அடுத்த ஆண்டுக்கு பணம் கட்டினால் மாப்பிள்ளை அல்லது மணப்பெண் வேட்டையை அந்த இணையதளத்தில் தொடரலாம். இல்லையென்றால் பதிவை அந்த இணையதளம் நீக்கிவிடும். இந்த கொடுமையை யார்கிட்ட சொல்வது. ஏமாந்துபோனதை தம்பட்டமா அடிக்க முடியும்?. இதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அமைதியாக கடந்து போவதைதவிர வேறு வழியில்லை.

இந்த திருமண தகவல் இணையதளங்கள், ஸ்கெட்ச் போட்டு பணத்தை பறிப்பதில் கில்லாடிகள். மணப்பெண்ணையோ, மணமகனையோ தேடுபவர்கள் பதிவு செய்ய முயற்சித்தாலோ அல்லது பதிவு கட்டணம்  செலுத்தியதுமோ உஷாராகி பண வேட்டையை துவங்கிவிடுவார்கள். பதிவர்களின் வருமானம், வேலை உள்ளிட்ட  விவரங்கள் அடிப்படையில் குடைச்சல் துவங்கும். இதைவிட அதிக பேக்கேஜ் உள்ளது. அந்த பேக்கேஜில் நீங்கள் விரும்புகிற மாதிரியான வரன்கள் எளிதில் கிடைக்கும் என்று தூண்டில் போடுவார்கள். உங்களுக்கென தனி ரிலேஷன்ஷிப் மேலாளர் இருப்பார். அவரே பொருத்தமான வரனை உங்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்புவார்.

உங்களுக்கு வேலை மிச்சம். சீக்கிரம் கல்யாணம்தான் என்று அள்ளிவிடுவார்கள். அத்தோடு சாம்பிளுக்கு சில வரன்களின் விவரங்களையும் தந்து ஆசை காட்டுவார்கள். செக்கசெவேலென்று சுண்டினால் ரத்தம் வரும் நிறம், சினிமா நடிகைகளே தோற்று போகும் அளவுக்கு அழகு பெண்களின் போட்டோவை பார்த்ததும் இந்த பெண்ணையே பார்க்கலாமே என்று ஆசையுடன் மாப்பிள்ளை வீட்டார் கூற, சந்தா கட்டுங்கள் அப்புறம் பார்த்துக்கலாம் என்று கூறிவிடுவார்கள். ஆசை யாரை விட்டது, அவர்கள் கேட்கும் தொகையை கட்டிவிடுவார்கள். அதன் பிறகு ஆன்லைனில் அந்த செக்கத் சிவந்த பெண்ணிற்கு தங்கள் விருப்பத்தை தெரிவிக்க ஓரிரு நாளில் பதில் வரும். அதன்பிறகு என்ன தகவல் அனுப்பினாலும் பதிலே வராது. நொந்துபோய் நம்ம மேலாளரை கேட்டால், பெண் வீட்டிற்கு விருப்பம் இல்லை, ஜாதகம் பொருந்தவில்லை என்று கூறிவிடுவார். அடுத்தடுத்து இதே போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

சில வரன்களின் பெற்றோரிடம் ஆன்லைனிலேயே பேச்சுவார்த்தை நடந்து வரும். திடீரென ஒரு நாள் பதிலே வராது. அழகான பெண்ணுடையபோட்டோவை காட்டி, இதுநாள் வரை பேசிக்கொண்டிருந்தவர் அந்த மேட்ரிமோனி இணையதள பணியாளர்தான் என்ற விவரம் பினனர் தெரிந்து அதிர்ச்சியில் உறைந்தவர்கள் பலர். ஆரம்பத்தில் வாரம் 4 வரன்களின் விவரங்கள் வரும், அதுவே திடீரென ஒன்றிரண்டு ஆகிவிடும். கேட்டாலும் அவ்வளவுதான் என்று பதில். இப்படியே சந்தா கட்டிய காலம் முடியும் காலம் நெருங்கிவிடும், ஆனால் திருமணம் மட்டும் கைகூடாது. இப்போது மீண்டும் எப்ப பணம் கட்டுவீங்க என்று நச்சரிப்பு துவங்கும். அதற்குள் மேட்ரிமோனி இணைய தளங்களின் மோசடியை  புரிந்து கொண்டவர்கள் பணம் கட்டாமல் தப்பிவிடுவார்கள்.

தெரியாதவர்கள் மீண்டும் மேட்ரிமோனி சுழலில் சிக்கி பணத்தை  இழந்துவிடுவார்கள். கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியவர்களின் கார்டில் இருந்து சந்தா தொகை தானாக செலுத்தப்படும் அநியாயமும் அரங்கேறுகிறது. இதோடு, மேட்ரிமோனி இணையதளங்களில் பரவிகிடக்கும் போலி வரன்களை அடையாளம் காண்பது மிகவும் சிரமம். ஏனென்றால் யார் வேண்டுமானாலும், பணம் கட்டி பதிவு செய்ய முடியும். பெண்ணின் படத்தை போட்டு மோசடி செய்யும் கும்பல் ஒருபுறம், பாலியல் தொழில் நடத்துபவர்கள் மறுபுறம், வேலை, வருமானம், ஜாதி, மதம் என்று எல்லாவற்றிலும் போலி தகவல்களை பதிந்து ஏமாற்றுவோர் மற்றொருபுறம். இப்படி, மேட்ரிமோனி இணையதளங்களில்  போலி பதிவுகள் நிறைந்திருக்கிறது.

 இதை சரிபார்க்க வேண்டியது இணையதளங்களின் கடமை தானே என்று கேட்டால், அது எங்கள் வேலை இல்லை என்று கூறிவிடுகிறார்கள். அப்புறம் எதற்கு இந்த மேட்ரிமோனி இணையதளங்கள். மேட்ரிமோனி இணையதளங்களின் மோசடிக்கு கடிவாளம் போட வேண்டிய காலம் வந்துவிட்டது. ஒன்றிய, மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக இறங்குவது அவசியம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.