மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் இதுவரை 83,350 ஏக்கர் சம்பா பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை கணக்கெடுக்கும் பணியில் தெரியவந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம், சீர்காழி பகுதி கனமழையால் வெள்ளக்காடானது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. மேலும் 15,000 குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நின்றது. வேளாண்மைத்துறை மூலம் வெள்ளத்தில் சேதமான சம்பா பயிர் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இது வரை மாவட்டம் முழுவதும் 83 ஆயிரத்து 350 ஏக்கர் சம்பா பயிர் பாதிக்கபட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2,120 ஏக்கர் கரும்பு பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடிய, வடிய கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
