சாமோலி: உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில் இருந்து 16 பேர்பல்லா ஜகோல் என்ற கிராமத்துக்கு நேற்று முன்தினம் சுமோ காரில் சென்றுகொண்டிருந்தனர். காரில் இடமில்லாத நிலையில், அதன் கூரை மீதும் சிலர் அமர்ந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஜோஷிமத் அருகே உர்கம் என்ற இடத்தில் சுமார் 300 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் சுமோ கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
தகவல் அறிந்து போலீஸாரும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இருவர் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தின்போது இருவர் சரியான நேரத்தில் வெளியே குதித்து காயமின்றி தப்பியதாக போலீஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆழ்ந்த வேதனைதெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலாரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். முன்னதாக சாமோலிமாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்ட முதல்வர், காயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்க உத்தரவிட்டார்.