கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 4 நாட்களில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திருக்கும் நிலையில் விடுமுறை நாளான இன்றும் சுமார் 67 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாலை அணிந்து இருமுடி கட்டி வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சரணம் கோஷங்கள் முழங்க ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். இன்றும் காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டது.
சபரி மலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 2 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இன்றும் 67 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக கேரளாவில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆதார் அடையாள அட்டைகளை காட்டி தரிசனத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளதால் நிலக்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 10 இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை தேவசம் போர்டு அதிகாரிகள் கேரள அரசுடன் இணைந்து செய்திருக்கின்றனர்.