புதுடில்லி, அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பான வழக்கில், தங்கள் தரப்பு வாதங்கள் மற்றும் ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி, முன்னாள் முதல்வர்களான பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் இருந்தனர். கடந்த ஜூன் ௨௩ம் தேதிகட்சியின் பொதுக் குழு கூட்டம் நடந்தது.
இதில், கட்சிக்கு ஒற்றைத் தலைமை இருக்கும் வகையில் விவாதிக்க மீண்டும் பொதுக் குழுவை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ஜூலை ௧௧ல் நடந்த கூட்டத்தில், கட்சியின் தற்காலிக பொதுச் செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இந்த முடிவுகள் செல்லாது என்று உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, தற்காலிக பொதுச் செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த, செப்., ௩௦ம் தேதி இந்த வழக்கை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது இந்த வழக்கில் முடிவு தெரியும்வரை, கட்சியின் பொதுச் செயலர் பதவிக்கு தேர்தல் நடத்தக் கூடாது என்று அமர்வு கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சுதான்சு துலியா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஏ. சுந்தரம், ”இந்த வழக்கில் முடிவு ஏற்படாததால், கட்சியின் சட்ட விதிகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தேர்தல் கமிஷன் மறுத்து வருகிறது. அதனால், விரைவில் விசாரிக்க வேண்டும்,” என வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான தங்களுடைய வாதங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்புக்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் விசாரணை, நவ., ௩௦க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்