அரக்கோணம்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஏக்தா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 10.40 மணியளவில் குஜராத் புறப்பட்டது. நள்ளிரவு 12 மணி அளவில் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே வந்தபோது, திடீரென ஏசி பெட்டியில் இருந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். இதனால், ரயில் அரக்கோணத்தில் நின்றது. திடீரென ரயில் நின்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, ஏசி பெட்டியில் இருந்த பயணிகள் இறங்கி, ஏசி சரிவர வேலை செய்யவில்லை. போர்வைகள் மற்றும் தலையணைகள் சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசுகிறது என தெரிவித்தனர். தொடர்ந்து, ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கூச்சலிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, ‘ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் போர்வை, தலையணை மாற்றி வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என்று கூறி ரயில்வே அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். இதையடுத்து, சுமார் 20 நிமிடம் தாமதமாக நள்ளிரவு 12.20 மணியளவில் அங்கிருந்து ஏக்தா எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது.
