சென்னை: தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் குற்றவாளிகள் கண்டறியப்படாததால், மாநில போலீஸாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் உதவி காவல் கண்காணிப்பாளர் மதன், சென்னை சிபிஐயைச் சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர், விசாரணை நிலை குறித்த விவரங்களை சீலிடப்பட்டகவரில் அறிக்கை தாக்கல் செய்தார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்ததையடுத்து, விசாரணை டிச.20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.