ராஜிவ்காந்தி கொலை வழக்கு: விடுதலை செய்யப்பட்ட முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்

திருச்சி: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன் பழைய வழக்கு ஒன்றில் 11- வது முறையாக வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணை 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து , முருகன் மீண்டும் திருச்சி அழைத்து செல்லப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த முருகன், உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடந்த 12.11.2022 அன்று விடுதலை செய்யப்பட்டார்.

வேலூர் மத்திய சிறையில் முருகன் இருந்த போது, அவரின் சிறை அறையை ஆய்வு செய்ய சென்ற பெண் காவலரிடம் முறைகேடாக நடந்துகொண்டதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய சிறைத் துறை அளித்த புகாரின் அடிப்படையில், முருகன் மீது பாகாயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கு வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 4- ல் நடைபெற்று வருகிறது.முருகன் இலங்கையை சேர்ந்தவர் என்பதாலும், அவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதாலும் தற்போது அவர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது வழக்கு விசாரணைக்காக நேற்று திருச்சியிலிருந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வேலூர் அழைத்துவரப்பட்ட முருகன், 11 – வது முறையாக வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நான்கில் ஆஜர் படுத்தப்பட்டார். சாட்சியங்கள் மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், வழக்கை வரும் 29.11.2022 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து முருகன் மீண்டும் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டார். முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் முருகனை அவரது மனைவி நளினி மற்றும் நளினியின் சகோதரர் நேரில் சந்தித்து பேசினர்.

இதனிடையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், “இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பை நேரடியாக எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்த பின்னரும், மத்திய அரசை ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் உரிய கோரிக்கை மனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நடைமுறை தவறு, சிக்கலால் மத்திய அரசால் ஒரு தரப்பாக வழக்கில் பங்கெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதன் காரணமாக உரிய வாதத்தையும் நீதிமன்றத்தில் எடுத்து வைக்க முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளது.

அதேபோல், வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்காத காரணத்தால்தான், அது தொடர்பான முக்கியமான ஆதாரங்களையும், ஆவணங்களையும் எடுத்து வைக்க இயலாமல் போனது. மத்திய அரசு தன் தரப்பு வாதத்தை எடுத்துவைக்காத காரணத்தால்தான் இந்த 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என கோரியிருந்தது.

இந்த பின்னணியில் உச்ச நீதிமன்றத்தின் மறு ஆய்வு மனுவின் அடிப்படையில் ஏழ்வர் விடுதலையில் ஏதேனும் மாற்றம் வருமா என்பதை சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.