புதுச்சேரி: புதுச்சேரியில் தொழிற்சாலைகளுக்கு மூன்று முக்கிய சலுகைகள் அளிப்பது தொடர்பாக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
புதுச்சேரியில் தொழில் தொடங்க, வரிச் சலுகை, மின் கட்டண சலுகை, மானியத்துடன் கடன் வசதி உள்ளிட்ட ஏராளமான சலுகைகள், கடந்த காலங்களில் வழங்கப்பட்டது. அதனால், தொழிலதிபர்கள் போட்டி போட்டுக் கொண்டு தொழில் தொடங்கினர். அமைதியான சூழல், தடையில்லா மின்சாரம், தண்ணீர் வசதி போன்றவைகளும் தொழில் முனைவோரை கவர்ந்திழுத்தன.
தட்டாஞ்சாவடி, திருபு வனை, மேட்டுப்பாளை யம், சேதராப்பட்டு, மணப்பட்டு, கிருமாம்பாக்கம் மற்றும் காரைக்காலில் தொழிற்பேட்டைகள் உருவாகின.
தொழிற்சாலைகள் ஓட்டம்
தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் குறைப்பு, ரவுடிகள் முதல் அரசியல் கட்சியினர் வரை மாமுல் கேட்டு மிரட்டுவது, தொழிற்சங்கங்களின் நெருக்கடி, பூதாகரமாக உருவெடுத்த சுமை துாக்குவோர் மற்றும் தொழிலாளர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதுச்சேரியில் புதிதாக தொழில் தொடங்க தொழில் முனைவோர் ஆர்வம் காட்டவில்லை.
ஏற்கனவே இருந்த தொழிற்சாலைகளையும் இழுத்து மூடிவிட்டு, விட்டால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டது.
மத்திய அரசு அனுமதி
கரசூர் சிறப்பு பொருளா தார மண்டலத்தில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர அண்மையில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள சூழ்நிலையில், புதுச்சேரிக்கு ஏராளமான தொழிற்சாலைகளை கொண்டு வந்து படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக ஐ.டி., பார்மாசூட்டிக்கல் தொழிற்சாலைகளை அதிக அளவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, புதுச்சேரியில் அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழிற்சாலைகளுக்கு பல்வேறு சலுகைகள் அளிப்பது தொடர்பாகவும் அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
புதிய தொழிற்சாலைகள் மற்றும் ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளுக்கும் எந்த மாதிரியான சலுகைகள் வழங்கலாம் என வரும் டிசம்பர் 1ம் தேதி வருவாய் துறை, உள்ளாட்சித் துறை, தொழில்துறையினருடன் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

என்ன சலுகை?
கடந்த காலங்களில் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கும்போது முத்திரைத்தாள் தீர்வில், முழு விலக்கு கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், முத்திரை தீர்வில் பாதி வருமானம் உள்ளாட்சிக்கு செல்லுவதால், சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து முழு முத்திரை தீர்வு கைவிடப்பட்டது.
தற்போது முத்திரைத்தாள் தீர்வு கட்டணத்தை முதலில் தொழிற்சாலைகள் செலுத்தியபின், அரசு திருப்பி தருவது குறித்து ஆலோசித்து வருகிறது. மேலும், தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 பைசா மானியம் அளிக்க அரசு திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
இதற்கு ஆண்டிற்கு ரூ.20 கோடி வரை செலவாகும் என மதிப்பிட்டுள் ளதால் அதற்கான நிதி நிலை தொடர்பாகவும் அரசு பரிசீலித்து வருகிறது. அதேபோல் மாநில ஜி.எஸ்.டி., பங்களிப்பு தொகையை மீண்டும் தொழிற்சாலைகளுக்கு குறிப்பிட்ட சதவீதம் திருப்பி தர திட்டமிட்டுள்ளது.
இந்த மூன்று சலுகைகள் குறித்து டிச.1 ம் தேதி நடக்கும் துறைகளுடன் நடக்கும் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுத்து, அரசாணையாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்