கேப்பர் சிறையில் ஒருமாதம்… மறக்க முடியாத ராணி மேரி கல்லூரி… நெகிழ்ந்து போன ஸ்டாலின்!

சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர்

இன்று கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அவர், பெண்களின் கல்விக்கு ஒளி விளக்காக ராணி மேரி கல்லூரி விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ராணி மேரி கல்லூரியும் ஒன்று. பட்டம் பெறும் நாள் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கிய நாள்.

இந்த கல்லூரியில் நுழைகிற போது பழைய நினைவுகள் வந்து சென்றன. அவற்றை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. ராணி மேரியை இடிப்பதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திட்டமிட்டார்கள். இந்த நேரத்தில் நான் அரசியல் பேச விரும்பவில்லை. கல்லூரியை இடிக்கக் கூடாது என்று சட்டமன்றத்தில் போராடினோம். குரல் கொடுத்தோம். அரசின் நடவடிக்கைக்கு எதிராக ராணி மேரி கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் மிகப்பெரிய அளவில் போராடிக் கொண்டிருந்தனர்.

அதன் உச்சகட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து மாணவிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே கல்லூரிக்கு வரக்கூடிய குடிநீர் விநியோகத்தை அரசு நிறுத்தியது. கழிப்பறைகளை பயன்படுத்தக் கூடாது என்று தடை போடப்பட்டது. இந்த கல்லூரி பேராசிரியர்களை வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்தார்கள்.

அப்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து சட்டமன்ற அலுவலகத்திற்கு கருணாநிதி அவர்கள் ஒரு செய்தியை சொன்னார்கள். சட்டமன்றம் முடிந்தவுடன் வரும் வழியில் ராணி மேரி கல்லூரிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகளுக்கு ஆறுதல் கூற வேண்டும். உங்களின் போராட்டத்தில் திமுக நிச்சயம் ஆதரவாக நிற்கும் என்ற செய்தியை சொல்லி விட்டு வருமாறு கூறினார்.

இந்த உத்தரவை ஏற்று நான், பொன்முடி மற்றும் சிலர் கல்லூரிக்கு வந்தோம். இங்கு வந்தவுடன் வாசலில் நின்றிருந்த காவலர்கள் எங்களுக்கு வணக்கம் சொல்லி கதவை திறந்து விட்டனர். அதன்பிறகு உள்ளே வந்தோம். இங்கு ஆயிரக்கணக்கான மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்களிடம் தைரியமாக இருங்கள். நல்ல காரியத்திற்காக போராடுகிறீர்கள்.

நாங்கள் எப்போதும் உங்களுடன் துணை நிற்போம். கலைஞர் இதை உங்களிடம் கூறிவிட்டு வரச் சொன்னார் எனத் தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றோம். இது நடந்தது பிற்பகல் 2.30 மணி இருக்கும். நள்ளிரவு 12 மணிக்கு வேளச்சேரியில் உள்ள எனது வீட்டிற்கு போலீஸ் வந்துவிட்டது. எதற்காக என்று கேள்வி எழுப்பினேன்.

ராணி மேரி கல்லூரியில் கேட் ஏறி குதித்து உள்ளே சென்று மாணவிகளை சந்தித்து பேசியுள்ளீர்கள். அதற்காக கைது செய்கிறோம் எனக் கூறினர். ஒருமாத காலம் கடலூர் சிறையில் இருந்தோம். மாணவிகளுக்காக இந்த தண்டனையை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டோம். ராணி மேரி கல்லூரி வளாகத்திற்கு கேப்பர் என்று பெயர். கடலூர் சிறைக்கும் ’கேப்பர் சிறை’ என்று தான் பெயர். என்னவொரு பொருத்தம் பாருங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.