`வீராங்கனை பிரியா மரணத்தில் அறுவைச் சிகிச்சையில் தவறு இல்லை, மாறாக…’- அமைச்சர் விளக்கம்

“கள்ளக்குறிச்சியில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மெடிக்கலில் மருந்து வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி உயிரிழப்பு‌ தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை, சைதாப்பேட்டை‌ பகுதியில் நீர் வழி தடங்கள் அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் 2000 பேருக்கு கொசுவலைகளையும், திமுக சார்பில் போர்வைகளையும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
image

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கள்ளக்குறிச்சியில் கருக்கலைப்பு செய்ய மெடிக்கலில் மருந்து வாங்கி சாப்பிட்ட பெண் உயிரிழப்பு குறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரை விசாரிக்க அறிவுறுத்தியுள்ளேன். அந்த அறிக்கைக்கு பிறகு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் யாரும் மெடிக்கலில் நேரடியாக மருந்து வாங்கி பயன்படுத்த கூடாது. எந்த நோயாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரை படியே மருந்து எடுக்க வேண்டும். மெடிக்கலில் பொதுமக்களுக்கு மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து வழங்க கூடாது.
image
கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியாவுக்கு செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையில் தவறு இல்லை. அறுவை சிகிச்சைக்கு பிறகு பேண்ட் கட்டுவதில் அலட்சியம், கவனக்குறைவு இருந்தது. அதை முறையாக அகற்றவில்லை. இதில் மருத்துவர்கள் இருவர் மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கவுன்சிலுக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் முறையாக நடத்தப்படும். மருத்துவ சங்கத்தில் சுமார் 1,50,000 பேர் பதிவு பெற்ற மருத்துவர்கள் உள்ளனர். இது குறித்து சங்கத்தினர் உயர் நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்‌. உயர் நீதிமன்றம் என்ன அறிவுரை வழங்குகிறது என்று பொருத்திருந்து அதற்கேற்றபடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
image
2011 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி என்ற கொள்கையை கருணாநிதி கொண்டுவந்தார். தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. புதிதாக பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி இல்லை. தென்காசி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை உள்பட புதிய மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதேபோன்று தண்டையார்பேட்டை புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள காலி இடத்தில் தமிழ் வழி மருத்துவக்கல்லூரி அமைக்கவும் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்.
image
மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை, இது தொடர்பாக ஏற்கெனவே நான் 6 முறை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். மீண்டும் டிசம்பர் 2-ஆவது வாரம் டெல்லி சென்று மத்திய சுகாதார துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.
மத்திய அரசு நாடுமுழுவதும் புதிதாக 100 மருத்துவக்கல்லூரி அமைக்க அனுமதி வழங்க உள்ளது. அதில் தமிழகத்தில் 7 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.