ராஜ்கோட்: குஜராத் சட்டசபைக்கு அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ள நிலையில், ராஜ்கோட்டில் உள்ள கிராமம் ஒன்று அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு தடை விதித்ததுடன், ஓட்டு போடாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் நடைமுறையை பின்பற்றி வருகிறது.
குஜராத் சட்டசபைக்கு டிச.,1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதனால், அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் மற்றும் டில்லி முதல்வர் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி நிர்வாகிகள், காங்கிரசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், குஜராத்தின் ராஜ்கோட்டில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ள ராஜ் சமதியாலா என்ற கிராமம் உள்ளது.1,700 பேர் வசிக்கின்றனர். 995 பேர் வாக்காளர்களாக உள்ளனர். வசிக்கும் இந்த கிராமத்தில் வித்தியாசமான நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் அரசியல் கட்சிகளும் பிரசாரம் செய்ய முடியாது. அதற்கு கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து முடிவு செய்துள்ளனர். பிரசாரத்தில் ஈடுபட்டால் கிராமத்திற்கு தீங்கு ஏற்படும் என கருதும் மக்கள் பிரசாரம் செய்ய யாரையும் அனுமதிக்கவில்லை.
அதேநேரத்தில் தேர்தல் அன்று ஓட்டுப்பதிவு குறைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில், ஓட்டுப்போடாத மக்களுக்கு ரூ.51 அபராதம் வசூலிக்கின்றனர். இதனால், அனைத்து தேர்தல்களிலும் பெரும்பாலும் இந்த கிராமத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது ஓட்டுகளை பதிவு செய்து விடுகின்றனர். இதனால் இந்த பகுதியில் 100 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகிவிடும்.
அதேநேரத்தில், வாக்காளர்கள் அனைவரும் தங்களது விருப்பப்பட்டவர்களுக்கு ஓட்டுப்போடுவார்கள். இந்த கிராமத்தில் அரசியல் கட்சிகள் பேனர் வைக்கவும், துண்டு பிரசுரம் விநியோகிக்கவும் அனுமதி கிடையாது.
இந்த விதிகளை உருவாக்கவும், கண்காணிக்கவும் கிராம வளர்ச்சி குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு வகுக்கும் விதிகளை மக்கள் தவறாமல் கடைபிடித்து வருகின்றனர். தேர்தல் நடக்கும் ஓரிரு நாட்களுக்கு முன்னர் இக்குழு கூடும். அப்போது, ஓட்டுப்போட முடியாதவர்கள், அதற்கான காரணத்தை இக்குழுவினரிடம் விளக்கி விடுவார்கள்.
இந்த கிராம பஞ்சாயத்து தலைவரும் ஒரு மித்த கருத்து அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுகிறார்.
இந்த கிராமத்தில், இண்டர்நெட் வசதி, வைபை, சிசிடிவி கேமராக்கள், சுத்தமான குடிநீர் வழங்க ஆர்ஓ திட்டம் உள்ளிட்டவை உள்ள நவீன கிராமமாக உள்ளது. ஆங்காங்கே குப்பைகளை கொட்டினால், அதற்கும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்த கிராமத்தை பார்த்து அருகில் உள்ள கிராமங்களும் இந்த நடைமுறையை பின்பற்ற துவங்கி உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement