தேனி மாவட்டம் கம்பம் அருகே மருத்துவர் சரிவர பணிக்கு வர வில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிராமத்தில் சுமார் 10,000-ற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மற்றும் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி அருகே உள்ள சுருளிப்பட்டி, நாராயணத்தேவன் பட்டி, அணைப்பட்டி, கருநாக்க முத்தன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக காமயகவுண்டன்பட்டி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலோபதி மருத்துவம், சித்த மருத்துவம், உள் நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் தொடர்ச்சியாக இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த மருத்துவமனையில் அலோபதி மருத்துவத் துறையில் பணி மருத்துவர் சரிவர பணிக்கு வரவில்லை எனவும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கடுமையாக மருத்துவர் நடந்து கொள்வதாகவும் கூறி பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த சூழ்நிலையில், இன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி மருத்துவர் பணிக்கு காலை 11:00 மணி வரை வராத காரணத்தினால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகள், கம்பம் காமயகவுண்டன்பட்டி சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்புறம் உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மருத்துவ துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் சென்றதால் உடனடியாக வேறு ஒரு மருத்துவரை காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தகவலறிந்து வந்த மருத்துவர்கள் மற்றும் இராயப்பன்பட்டி காவல்துறையினர் சேர்ந்து சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இனிவரும் காலங்களில் இது போன்ற காலதாமதம் ஏற்படாது எனவும் பணி மருத்துவர் சரியான முறையில் பணிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்ததை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
