சென்னை: சென்னை சாஸ்திரி பவனில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் 9 அடி வெண்கல சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். அப்போது, ‘நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது’ என்றார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில், மத்திய பொதுப்பணி துறைசார்பில், சுதந்திரப் போராட்ட வீரரும், நாட்டின் 2-வது பிரதமருமான லால்பகதூர் சாஸ்திரி சிலைஅமைக்கப்பட்டுள்ளது. 9.5 அடி உயரம், 850 கிலோ எடையில் ரூ.15 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட வெண்கல சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:
லால்பகதூர் சாஸ்திரியின் எளிமை, தேசவளர்ச்சிக்கான அவரது பங்களிப்பு போற்றுதலுக்குரியது. ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற அவரது முழக்கம் மிகவும் பிரபலமானதாகும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பாதுகாப்புத்துறையின் தேவை கருத்தில் கொள்ளப்படாததால், ஜம்மு காஷ்மீரின் பெரும் பகுதி, குறிப்பாக,சியாச்சின் உட்பட ஒவ்வொரு பிரதேசங்களாக எதிரிகளிடம் இழந்தோம்.
அதனால், 1962-ல் நாடு மிகப்பெரும் அவமானத்தை சந்தித்தது. நமது அணிசேரா கொள்கை, அமைதிக் கொள்கை ஆகியவற்றால் ஆக்கிரமிப்பு, ஊடுருவல் அதிகரித்து, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து நிலவியது. இதேபோல, கடும் வறட்சி ஏற்பட்டு, உணவு பஞ்சத்தால் நாடு பெரும் இன்னல்களை சந்தித்தது. மக்களுக்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
லால்பகதூர் சாஸ்திரி பிரதமரான பிறகு, ‘நாடும், நாட்டின் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்பதை வலியுறுத்தி ‘ஜெய் ஜவான்’ என்று முழங்கினார். ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்தார். 1965-ல் நடந்த போர் வெற்றிக்கு பிறகு, நம்நாட்டின் வலிமையை அனைவரும் உணர்ந்தனர்.
நாட்டில் மக்கள்தொகை உயர்ந்தபோதிலும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததோடு, உலகுக்கே உணவு வழங்கி வருகிறோம். உலகின் எந்த மூலையில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், இந்தியா தானாக முன்வந்து உணவு வழங்குகிறது. லால்பகதூர் சாஸ்திரி அமைத்துக் கொடுத்த பசுமை இயக்கமே இதற்கு காரணம். தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் துறைமுகத்தை முக்கிய துறைமுகமாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு. தேசத்துக்காக அவர் ஆற்றிய பங்களிப்பை மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.
நான் தமிழக ஆளுநராக பதவியேற்றபோது, தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் 40 பேரின் விவரம் மட்டுமே எனக்கு தெரிந்திருந்து. தற்போது 1,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டுள்ளேன்.
நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த வீரர்களின்தியாகத்தை ஒருபோதும் மறக்க கூடாது. லால்பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்கள் நமக்கு அளித்துள்ள பாதையில் கடமையாற்றி, 100-வது சுதந்திர தினத்தில் இந்தியாவை உலகின் வழிகாட்டியாக மாற்ற வேண்டும். இவ்வாறு ஆளுநர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், டெல்லி லால்பகதூர் சாஸ்திரி நினைவு அறக்கட்டளை தலைவர் அனில்குமார் சாஸ்திரி, மத்திய பொதுப்பணி துறை சென்னை மண்டல அலுவலக சிறப்பு தலைமை இயக்குநர் ராஜேஷ் குமார் கவுஷல்,லால்பகதூர் சாஸ்திரியின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.