பொன்மாணிக்கவேலிடம் சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக பொன் மாணிக்கவேலின் மேல்முறையீட்டு மனு விவகாரம் தொடர்பாக மனுதாரர், தமிழக அரசு மற்றும் எதிர்மனுதாரர் சிபிஐ ஆகியோர் 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பொன் மாணிக்கவேலிடம் சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் என தெரிவித்தனர்.  சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து, பலகோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பியாக இருந்த காதர்பாட்சா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக காதர்பாட்சா வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், பழவளூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து பொன்மாணிக்கவேல் தன்னை அதிகார ரீதியில் பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு தொடர்ந்ததாக காதர்பாட்சா குற்றம்சாட்டியிருந்தார். இவ்விவகாரத்தை சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என காதர்பாட்சா குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து காதர்பாட்சா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், மேற்கண்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, பொன்மாணிக்கவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ரவீந்தர் பட் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் நாகமுத்து, பார்த்திபன் ஆகியோர் வைத்த வாதத்தில், பல்வேறு சாமி சிலைகள் மீட்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டது. இதில் காதர்பாட்சாவின் குற்றச்சாட்டை சரியான முறையில் ஆய்வு செய்யாமல், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக கருத்தில் கொள்ளவில்லை. அதனால் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருஷ்ணா முராரி, சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விவகாரத்தில் பொன் மாணிக்கவேலிடம் சிபிஐ விசாரணை என்ற நடைமுறை தொடர்ந்து இருக்கட்டும். அதற்கு ஏன் ஒரு இடைக்கால தடை உத்தரவு வேண்டும் என கேட்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த மனுதாரர் காதர்பாட்சா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் விவகாரத்தில் பொன்மாணிக்கவேல் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளார்.

இவ்வழக்கை பொறுத்தமட்டில் விரிவாக ஆய்வு செய்துதான், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் பொன் மாணிக்கவேலின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பொன்மாணிக்கவேலின் மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக எதிர் மனுதாரர் காதர்பாட்சா மற்றும் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்தனர். அதேபோல், இவ்வழக்கில் சிபிஐயை எதிர்மனுதாரராக இணைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான பதிலை 3 வாரங்களில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், அடுத்த விசாரணை விடுமுறை காலத்துக்கு பின்னர் பட்டியலிடுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலிடம் சிபிஐ விசாரணை என்ற நடைமுறை தொடரலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளதால், பொன் மாணிக்கவேலிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.