செஃப் தாமு பாடிய பாடல் ~ நடுவராக 10க்கு 10 மதிப்பெண் கொடுத்த ஷிவாங்கி! 

சாதனைப் பெண்களைச் சிறப்பிக்கும் அவள் விகடனின் 5-ம் ஆண்டு ‘அவள் விருதுகள்’  விழா, கடந்த 18-ம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் ‘அவள் ஐகான் விருது’ திரைப்பட நடிகை பிரியா பவானிஷங்கருக்கு வழங்கப்பட்டது.

திறமையைக் கொண்டு, தன் எல்லைகளை விரித்துக் கொண்டே செல்லலாம் என்பதற்கு பிரியா பவானிஷங்கர் நல்ல உதாரணம். செய்தி வாசிப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கியவர், அடுத்ததாக தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். `மேயாத மான்’  மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமான அவர் தொடர்ச்சியாக `கடைக்குட்டி சிங்கம்’, `மான்ஸ்டர்’, `ஓ மணப்பெண்ணே’, `யானை’ என அடுத்தடுத்த படங்கள் மூலம் தனக்கான ரசிகப்பரப்பை உருவாக்கியிருக்கிறார்.

அவள் ஐகான் விருது பெறும் பிரியா பவானிஷங்கர்

பிரியா பவானிஷங்கருக்கு `அவள் ஐகான்’ விருதினை வழங்கிச் சிறப்பித்தார் 80களில் ஐகானாகத் திகழ்ந்த நடிகை அம்பிகா.

நெகிழ்ச்சியோடு விருதுக்கு நன்றி கூறிய பிரியா பவானிஷங்கருக்கு, அவரின் ரசிகர்கள் கேட்ட கேள்விகள் திரையிடப்படவே, அவற்றுக்கு பதில் கூறினார்.

கேள்வி: “வீக் எண்ட்ல எங்க அவுட்டிங் போவீங்க… உங்களை எங்க பார்க்க முடியும்?”

பதில்: “பெருசா அவுட்டிங்லாம் போக மாட்டேன்… எங்க வீட்டு மொட்டை மாடில வேணா என்னைப் பார்க்கலாம்..”

கேள்வி: “நியூஸ் ரீடரா இருந்தப்ப எந்த வார்த்தையை உச்சரிக்க சிரமப்பட்டீங்க?”

பதில்: “பரிமாணம், பரிணாமம் இந்த வார்த்தைகளை உச்சரிக்க சிரமப்பட்டிருக்கேன். எங்க பரிணாமம் வரும், எங்க பரிமாணம் வரும்ங்கிறதுல குழப்பம் இப்ப வரைக்கும் இருக்கு…”

கேள்வி: “எந்த காஸ்ட்யூம் உங்களுக்கு ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்கு?”

பதில்: “டெய்லி வியர்தான். இந்த விஷயத்துல எனக்கு புஷ்கர் காயத்ரியைப் பிடிக்கும். ஏன்னா அவங்க நார்மலான காஸ்ட்யூம்லதான் வருவாங்க. காஸ்ட்யூம்க்காக ரொம்ப மெனக்கெட மாட்டாங்க. எனக்கும் அதான் கம்ஃபர்டபிள்னு தோணுது” என்றவர், உடன் பணியாற்றிய நடிகர்கள் குறித்துக் கேட்டபோது “கார்த்தி என் காலேஜ் சீனியர். என்னை அவர் ஜூனியர்னுதான் கூப்பிடுவார்” என்றார்.

எல்லாக் கேள்விகளுக்கும் சிம்பிள் ஆகவும் ஹம்பிள் ஆகவும் சிரித்தபடியே பதில் சொன்னது அனைவரையும் கவர்ந்தது. 

சூப்பர் சிங்கர் ஷோவில் பாடகியாகப் பங்கேற்று `குக் வித் கோமாளி’ ஷோவில் கோமாளியாகப் பலரையும் ரசிக்க வைத்தவர் ஷிவாங்கி. தனது குறும்புத்தனத்தின் மூலம் அனைவரையும் சிரிக்க வைக்கும் இவர், பாடல்கள் மூலம் உருக வைத்து விடுவார்.  தமிழ் தொலைக்காட்சி நேயர்கள் பலருக்கும் செல்லப்பிள்ளையான  ஷிவாங்கிக்கு `வைரல் ஸ்டார்’ விருது வழங்கப்பட்டது.

சமையல் கலையில் முன்னோடியாகத் திகழும் செஃப் தாமு, இவ்விருதினை ஷிவாங்கிக்கு வழங்கினார்.

‘வைரல் ஸ்டார்’ விருது பெறும் ஷிவாங்கி!

“இவ்வளவு சாதிச்சவங்க முன்னாடி நிக்குறதே பெருமையா இருக்கு. என் அப்பா தாமு சார்கிட்ட முதல்முறையா விருது வாங்குறேன். இங்க நிக்கிறதே ஒரு மாதிரி குளு குளுன்னு இருக்கு. என்னைப் பத்தின வீடியோ போட்டப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அதனால அதை என் போன்ல வீடியோ எடுத்தேன்” என வெகுளித்தனமும், குறும்புத்தனமும் ஒன்று சேரப் பேசிய ஷிவாங்கிக்கு, ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அவர் செஃப் தாமுவைப் பாட வைத்து, அதற்கு மதிப்பெண் போட வேண்டும் என்பதே அது.

செஃப் தாமு அதைத் தொடர்ந்து “நான் பாடகனில்லை… தப்பாச்சுன்னா மன்னிச்சுக்கங்க” என்று சொல்லிவிட்டு “தேனே தென்பாண்டி மீனே… இசைத்தேனே… இசைத்தேனே” என தேர்ந்த பாடகரைப் போல் நேர்த்தியாகப்பாடி, அரங்கத்தினரை பிரமிக்க வைத்தார். ஷிவாங்கி அவர் பாடியதற்கு 10க்கு 10 மதிப்பெண் கொடுத்தார்.

`நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தில் வடிவேலுவுடன் நடித்து வருகிறார் ஷிவாங்கி. நகைச்சுவை மன்னன் வடிவேலுவுடன் நடித்த அனுபவம் குறித்து ஷிவாங்கியிடம் கேட்டதற்கு…

“வடிவேலு சார் காமெடி இல்லாம இங்க எதுவுமே இல்லை. அவரை எப்பவும் நான் ரொம்ப ரசிப்பேன். ஆனா, அவர்கூடவே நடிப்பேன்னு எதிர்பார்க்கலை” என்றவருக்கு, அந்த மேடையில் வடிவேலு புகைப்படங்களைக் காட்சிப்படுத்தி, அவற்றைப் பார்த்து அந்தத் திரைப்படக் காட்சியின் வசனத்தைப் பேசிக்காட்ட வேண்டும் என்று அடுத்த டாஸ்க் கொடுக்கப்பட்டது.

வடிவேலு ரசிகை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அந்த வசனங்களை ரசித்துப் பேசி, அரங்கை உற்சாகமூட்டினார். இறுதியாக, ஷிவாங்கியின் அம்மா பாடி, `சந்திரமுகி’ திரைப்படத்தில் இடம்பெற்ற `ராரா’ பாடலைப் பாடி பலத்த கைத்தட்டல்களையும் வாங்கிக்கொண்டு விடை பெற்றார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.