7 உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம்: கொலீஜியம் பரிந்துரை!

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உட்பட ஏழு உயர் நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய, உச்ச நீதிமன்றத்தின், கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

கொலீஜியம் என்பது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவாகும். இந்தத் தேர்வுக் குழுவின் பணி, உச்ச நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதும், மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிப்பதும் ஆகும்.

இந்நிலையில் இன்று, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உட்பட ஏழு உயர் நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய, உச்ச நீதிமன்றத்தின், கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பான கொலீஜியம் அமைப்பின் பரிந்துரை பட்டியல்:

நீதிபதி வி.எம்.வேலுமணி, சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். நீதிபதி பட்டு தேவானந்த் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

நீதிபதி டி.ரமேஷ், ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்திலிருந்து இருந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நீதிபதி லலிதா கன்னேகந்தி தெலங்கானா உயர் நீதிமன்றத்திலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

நீதிபதி டி.நாகார்ஜுன் தெலங்கானா உயர் நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நீதிபதி டி.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதே போல், நீதிபதி ஏ. அபிஷேக் ரெட்டி தெலங்கானா உயர் நீதிமன்றத்திலிருந்து பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி ஏ. அபிஷேக் ரெட்டி ஆகியோரது பணியிட மாற்றத்திற்கு அந்தந்த மாநில வழக்கறிஞர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கொலீஜியம் அமைப்பு இந்த பரிந்துரையை செய்துள்ளது.

அதே சமயம், குஜராத் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி நிகில் எஸ்.கரியல் பெயர் கொலீஜியம் பரிந்துரை பட்டியலில் இல்லை. இவர், பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, அம்மாநில உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.