குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் தேர்தல் நடக்கிறது.
முதற்கட்டமாக நடக்கும் இத்தேர்தலில், 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2வது கட்டமாக, 93 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 5ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
இதில் 93 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இவ்வாறாக 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதை தொடர்ந்து 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என, அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். பாஜக தலைவர்கள் அனைவரும் தங்களது பங்குக்கு குஜராத்தில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி பம்பரமாக சுழன்று, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்று ஒரே நாளில் நான்கு இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
இதற்கிடையே நேற்று மாலை அகமதாபாத்தின் பாவ்லா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது மர்ம டிரோன் ஒன்று அப்பகுதியில் பறந்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக மர்ம டிரோனை சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தினால் சிறிது நேரம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி டிரோன்களை பறக்க விட்டதாக 3 பேர் கைது செய்தனர். அவர்கள் பிரதமர் தேர்தல் பிரசாரத்தை டிரோனில் வீடியோ எடுக்க முடிவு செய்து, அவ்வாறு செய்தது தெரிய வந்தது.
ஆனாலும், பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் அனுமதி இல்லாமல் டிரோன்களை பறக்க விட்டதாக, கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி இருக்கும் பகுதியில் வானில் வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் எப்படி டிரோன் பறந்தது? என்றும், பிரதமரின் பாதுகாப்பில் எப்படி குளறுபடி ஏற்பட்டது? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த விவகாரத்தை பாஜக ஒரு அஸ்திரமாக மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாகவே தேர்தல் வந்தால் பிரதமர் மோடி கண்ணீர் விட்டு உணர்வு பூர்வமாக வாக்கு சேகரிப்பது வழக்கம் என்ற பேச்சு உள்ளது.
ஆனால் இந்த முறை அப்படி ஒன்றும் அரங்கேறவில்லை. அதே சமயம் வருகிற 2024ம் ஆண்டு எம்.பி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் எதை வைத்து இந்துக்களின் வாக்குகளை இழுப்பது? என பாஜக ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நேரத்தில் தான் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
எனவே இதையே ஒரு அஸ்திரமாக எடுத்து கொண்ட பாஜக தலைவர்கள் குஜராத் முழுவதும் பரவி பிரதமர் மோடி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், அவரை காப்பாற்ற தேர்தலில் பாஜகவுக்கே வாக்களிக்க வேண்டும் எனவும், வாக்காளர்களிடையே தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பாஜக வெற்றி உறுதியாகி உள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.