போலீஸ் தேடுவோர் அடைகலம் அடையும் இடமாக பாஜக… முத்தரசன் பகிரங்க குற்றச்சாட்டு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். பல்வேறு விஷயங்கள் குறித்து அப்போது அவர் கூறியது:

அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், அரசியலமைப்புக்குட்பட்டு செயல்பட வேண்டிய அமைப்புகளை பா.ஜ.க அரசு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது என தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தோம். தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்ச நீதிமன்றமே மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து விளக்கம் கேட்டுள்ளது. பாஜக அரசின் மீதான எதிர்கட்சிகளின் குற்றம்சாட்டு உண்மை என்று தற்போது நிரூபணமாகி உள்ளது.

அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு தான் ஆட்சி செய்ய வேண்டும். ஆனால் மோடி அரசு அரசியலமைப்பை சிதைத்து ஆட்சி செய்கிறது. இந்தி, சமஸ்கிருதத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் காசியில் நடைபெறும் தமிழ் சங்க தொடக்க விழாவில் தமிழை குறித்து புகழ்ந்து பேசிய மோடி தமிழ் மொழிக்கு எதுவும் செய்யவில்லை.

மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு ஆண்டும் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது, தமிழுக்கு மிக மிக குறைவாகவே நிதி ஒதுக்கப்படுகிறது. மோடியின் உதடு தமிழை புகழ்ந்து பேசுகிறது ஆனால் உள்ளம் சமஸ்கிருதத்துற்கு தான் முக்கியத்துவம் தருகிறது.மொழிகளை மட்டுமல்ல; அவர் மாநிலங்களையும் சமமாக நடத்தவில்லை.

122 ஆண்டுகளில் பெய்யாத மழை மயிலாடுதுறை மாவட்டத்தை புரட்டி போட்டுள்ளது. ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மோடி அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் குஜராத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அங்கு சென்று மக்களுக்கு உதவுகிறார்.

மோடி தொடர்ந்து பொய்யை மட்டுமே பேசி வருகிறார். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என கூறினார் ஆனால் தற்போது 71 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இதுவும் 2024 தேர்தலை கருத்தில் கொண்டு தான்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல பிரச்சனைகள் உருவாக காரணமாகி வருகிறார். இந்தியா மதச்சார்பின்மை நாடு ஆனால் ஆளுநர் இந்தியாவை இந்துக்களின் நாடு என்கிறார். இது அரசியலமைப்பு சட்டற்றிற்கு எதிரானது. அதற்கு அவரை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும்.

இந்து, சனாதனம் போன்றவற்றை பேசி வந்த அவர், தற்போது மார்க்ஸ் குறித்து பேசுகிறார். மார்க்ஸ் தத்துவத்தால் எந்த நாடும் சீரழியவில்லை. அந்த தத்துவத்தால் மாற்றங்கள் தான் நடந்துள்ளது. ஆனால் ஆளுநர் ரவி மார்க்ஸால் தான் நாடு சீரழிந்தது என பேச தொடங்கி உள்ளார்.

மனு நீதியை உயர்த்திப்பிடிப்பது ஆர்.என்.ரவியின் கொள்கையாக இருக்கட்டும் அதை அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் கொள்கையை பரப்பட்டும்.

அதேசமயம் அவர், மனு தர்மம் குறித்து வெளிப்படையாக பேச மறுக்கிறார். தங்கள் கொள்கையை பகிரங்கமாக பேச முடியாமல் அதை மூடி மறைத்து அமைப்பை நடத்துவது ஆர்.எஸ்.எஸ் தான். அந்த அமைப்பின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி வரும் டிசம்பர் 29 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மின்சார வாரியம் கைவிட வேண்டும். கூடுதல் கால அவகாசம் கொடுக்க வேண்டும். மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

சட்ட பேரவையில் நிறைவேற்றும் தீர்மானம் மக்கள் நலன் சார்ந்தது. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. ஆன் லைன் சூதாட்டம் ரத்து உட்பட சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களை அவர் கிடப்பில் வைத்துள்ளார். ஆன் லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக விளக்கம் கேட்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. அதை அவர் உடனடியாக செய்யாமல் காலம் தாழ்த்தி செய்வது உள்நோக்கம் கொண்டது. மோடி ஆதரவோடு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார் என்பதற்கான அடையாளம் இது.

காவல் துறையால் தேடப்படுபவர்கள் அடைக்கலம் அடையும் இடமாக பாஜக இருக்கிறது. அவர்களுக்கு பொறுப்புகளும் வழங்கப்படுகிறது. அந்த கட்சி வித்தியாசமான கட்சி என்று முத்தரசன் விமர்சித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.