புதுடெல்லி: காசி தமிழ்ச் சங்கமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 2 நாள் கிரிக்கெட் போட்டி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. தமிழகம் – உத்தரபிரதேசம் இடையிலான இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சுப்பிரமணிய பாரதி பெயரில் கோப்பை அளிக்கப்பட உள்ளது.
உ.பி. வாரணாசியில் ஒரு மாத நிகழ்ச்சியாக காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மற்றும் காசிக்கு இடையிலான கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உறவுகளை வெளிப்படுத்த முயற்சிக்கப் படுகிறது. இந்த வகையில், உ.பி. மற்றும் தமிழகம் இடையே மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு மகாகவி சுப்பிரமணிய பாரதி பெயரில் கோப்பை வழங்கப்பட உள்ளது.
இந்தப் போட்டியை அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து பாஜக மாற்றுத் திறனாளிகள் பிரிவு நடத்துகிறது. இதை வாரணாசி மாவட்ட ஆட்சியரும் தமிழருமான எஸ்.ராஜலிங்கம் தொடங்கி வைக்கிறார். பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா நாளை கலந்துகொள்கிறார்.
இப்போட்டிக்கான விளையாட்டு வீரர்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு வாரணாசி வந்தனர். இவர்கள், காசி தமிழ்ச் சங்கமத்துக்காக தமிழகத்தில் இருந்து ரயிலில் வரும் மூன்றாவது குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான உத்தம் ஓஜா கூறும்போது, “காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக நாங்கள் இந்த டி20 கிரிக்கெட் போட்டியை நடத்துகிறோம். இரண்டு நாட்களில் 3 போட்டிகள் நடைபெற உள்ளன. உ.பி. மற்றும் தமிழக வீரர்கள் இடையே முதல்முறையாக நடைபெறும் கிரிக்கெட் போட்டி இது” என்றார்.
வாரணாசி கிரிக்கெட் போட்டியில் தமிழகம் சார்பில் சச்சின் சிவா, லிங்கா, ஷாஹுல், கார்த்தி, பாலசுந்தர், சபரி, மணி, வசந்த், நி, அருண், செந்தில், லஷ்மணன், நிஷாந்த் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவர்களது மேலாளர் ஹரியும் உடன் வந்துள் ளார். ஜெய் நாராயண் இண்டர் காலேஜ் பள்ளியில் போட்டி நடைபெறுகிறது.
மகாகவி பாரதி இளமைப் பருவத்தில் சில ஆண்டுகள் வாரணாசியில் இருந்தபோது இந்தப் பள்ளியில்தான் சேர்க்கப் பட்டிருந்தார். இதை நினைவுகூரும் வகையில் போட்டியில் வெல்லும் அணிக்கு சுப்பிரமணிய பாரதி பெயரில் பரிசுக் கோப்பையும், வெகுமதியாக ரொக்கத் தொகையும் அளிக்க உள்ளனர்.