தமிழகத்தையே அதிரவைத்த இரட்டைக் கொலை; சாமியார் கண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

திருச்சி கிராப்பட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் துரைராஜ், அவரது கார் ஓட்டுநரான சக்திவேல் ஆகிய இருவரும் கடந்த 2007 ஜனவரி 22-ம் தேதி, மணப்பாறை வையம்பட்டி அருகே காரோடு எரித்துக் கொலைசெய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக வையம்பட்டி போலீஸார் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் குறித்து எதுவும் தெரியாததால், வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.

யமுனா – சாமியார் கண்ணன்

அதையடுத்து, தொழிலதிபர் துரைராஜ் யமுனா என்ற பெண்மணியுடன் தொடர்பில் இருந்ததும், அதே பெண்மணியுடன் சாமியார் கண்ணன் என்பவரும் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. விசாரணையில், திருமணம் மீறிய உறவு விவகாரம் காரணமாக சாமியார் கண்ணன், யமுனா, அவர் தாயார் சீதாலட்சுமியுடன் சேர்ந்து இந்த கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. அதனடிப்படையில் மூவரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சீதாலட்சுமி வயது முதிர்வு, நோய் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார்.

இது சம்பந்தமான வழக்கு திருச்சி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு சம்பந்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களும் கடந்த 12-ம் தேதி முடிவடைந்திருந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதையடுத்து திருச்சி மத்திய சிறையிலிருந்த சாமியார் கண்ணன், திருச்சி மகளிர் சிறையிலிருந்த யமுனா ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். விசாரணையின் முடிவில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கொலையாளிகளான சாமியார் கண்ணன், யமுனா ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.