புதுடில்லியின் முக்கிய கடைவீதியில், நேற்று முன் தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ௧௦௦க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையாகும் கடைகள் எரிந்து சாம்பலாயின. இதில், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, சாந்தினி சவுக் பகுதியில் உள்ள பாகிரத் பேலஸ் என்ற இடத்தில், மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மொத்த விலை கடைகள் நுாற்றுக்கணக்கில் உள்ளன. மிகவும் நெருக்கடி மிக்க இப்பகுதியில், நேற்று முன் தினம் இரவு திடீரென ஒரு கடையில் தீப்பற்றி, அடுத்தடுத்த கடைகளுக்கு வேகமாகப் பரவியது.
சம்பவ இடத்துக்கு ௪௦ தீயணைக்கும் வாகனங்கள் விரைந்து சென்றன. ௨௦௦ தீயணைக்கும் வீரர்கள், ௧௨ மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறுகிய பாதையாக இருந்ததாலும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவும், தீயை அணைக்க போராட வேண்டி இருந்தது. விபத்தில், உயிர் பலி இல்லை. ஆனால், கடைக்காரர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement