சென்னை: தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை செய்வதை நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் பல மாதங்களுக்கு முன்பே கரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு விலக்கியதோடு, கரோனா தடுப்பூசி முகாம்களையும் நிறுத்திவிட்டது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என்பது மட்டும் தொடர்கிறது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.700 கட்டணம் செலுத்தி கரோனா பரிசோதனை செய்யுமாறு கட்டாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டபோது, “கரோனா தொற்று முற்றிலும் குறைந்துவிட்டது. ஆனாலும், கரோனா பரிசோதனை செய்த பின்னரே, மற்ற பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். மேலும், கரோனா பரிசோதனை முடிவையும் தெரிவிப்பதில்லை. இதுகுறித்து கேட்டால், கரோனா பரிசோதனை முடிவுகளை, சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு தெரிவித்துவிட்டதாக கூறி பரிசோதனைக்கான கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொள்கின்றனர்.
உண்மையிலேயே கரோனா பரிசோதனை செய்தார்களா அல்லது கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொண்டார்களா என்று சந்தேகம் எழுகிறது. எனவே, தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனையை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவர்களிடம் கேட்டபோது, “அனைத்து நோயாளிகளுக்கும் கரோனா பரிசோதனை வேண்டியதில்லை. அறுவை சிகிச்சை செய்யும் நோயாளிகளுக்கு மட்டும் கரோனா பரிசோதனை செய்யலாம். தனியார்மருத்துவமனைகளில் தேவையில்லாமல் செய்யப்படும் கரோனா பரிசோதனையை தடுப்பதற்கு, உரிய வழிகாட்டுதலை அரசு வெளியிட வேண்டும்” என்றனர்.
தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தனியார் மருத்துவமனைகளில் கட்டாய கரோனா பரிசோதனை செய்வதாக பலர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஆலோசனை நடந்து வருகிறது. கரோனா பரிசோதனை யாருக்கு செய்ய வேண்டும், யாருக்கு செய்ய வேண்டியதில்லை என்ற வழிகாட்டுதலை தமிழக அரசு விரைவில் வெளியிடும். விமான நிலையங்களிலும் கரோனா பரிசோதனை சான்றிதழ் தொடர்பாக புதிய வழிகாட்டுதல் வெளியிடப்படும்” என்றனர்.