காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடத்திவரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழகத்திலிருந்து செல்லும் 5வது ரயில் சேவை கோயம்புத்தூரில் இருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 90 பயணிகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் ரயிலில் தங்களது பயணத்தை இன்று துவங்கினர்.
கடந்த 20ம் தேதி கோவையிலிருந்து சென்ற ரயிலில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இன்று கோவையிலிருந்து கிளம்பியுள்ள ரயிலில் வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் பலர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை பாரதிய ஜனதா கட்சியினர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர். இந்த வழியனுப்பு நிகழ்வில் பாஜக வழக்கறிஞர் பிரிவின் மாநிலத் தலைவர் வணங்காமுடி, ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் அரசூர் அசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காசி தமிழ் சங்கமம் ரயில் சேவை கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை துவங்கப்படுவதையடுத்து ரயில்வே மற்றும் மாநகர காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக, உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருக்கும் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் கலாசாரத் துறை சார்பில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி அடுத்த மாதம் 16ஆம் தேதிவரை நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். மேலும் திருக்குறள் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பிரதமரால் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர் சுதிர் ஜெயின், சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி உள்பட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.