“அடுத்த பிறந்தநாளை உதயநிதி அமைச்சராக கொண்டாடினால் நல்லது”- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“அமைச்சராகும் அனைத்து தகுதியும் உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கிறது. அடுத்த பிறந்த நாளை அமைச்சராக அவர் கொண்டாடினால் நல்லது” என மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று பேசியுள்ளார்.
திமுகவின் இளைஞர் அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட குடிசைவால் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஐந்து விளக்கு பகுதியில் மருத்துவ முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
image
மருத்துவ முகாமை தொடங்கி வைத்துவிட்டு, அதை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன்,
“சீனாவில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு இருந்தாலும், கொரோனா பூஜ்ஜிய நிலையை நோக்கியே செல்கிறது. சர்வதேச விமான நிலையங்களில் கடைபிடிக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. அதே போல் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் கட்டாய கோரோனா பரிசோதனைக்கு மிக விரைவில் தளர்வு அளிக்கப்படும். முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கு இன்சூரன்ஸ் பணம் சென்று சேர்வதில் எந்த சிக்கலும் இல்லை. அனைத்து மருத்துவமனைகளிலும் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
image
மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கான பிரீமியத் தொகையை உயர்த்தி வழங்குபடி இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து கோரிக்கை வரவில்லை. அரசு மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளுக்கான தொகை க்ளெய்ம் ஆகவில்லை என்றும் புகார் வரவில்லை.  அப்படி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 800 அரசு மருத்துவமனைகளிலும், 900 தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சுமார் 1513 சிகிச்சைகளுக்கு காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
துவக்கத்தில் 1 லட்சமாக இருந்ததை, 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு 22 லட்சம் வரை காப்பீடு தொகை வழங்கப்படுகிறது” என்றார்.
image
தொடர்ந்து உதயநிதி பிறந்தநாள் குறித்து அமைச்சர் பேசுகையில், “திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆரவாரம் இல்லாமல் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படியே சைதாப்பேட்டை தொகுதியில் மட்டும் 300க்கும் மேற்பட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செயயப்பட்டுள்ளது. குடிசைப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மெகா மருத்துவ முகாம் ஐந்து விளக்கு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று கழக இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தோம். @Udhaystalin #masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/yT0O1BfF10
— Subramanian.Ma (@Subramanian_ma) November 27, 2022

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையான நாளாக அமையும். அடுத்த பிறந்தநாளை அமைச்சராக உதயநிதி கொண்டாடினால் நல்லது. அமைச்சராகும் அனைத்து தகுதியும் அவருக்கு இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடித்தளம் வலுவாக இருக்க 30 லட்சம் இளைஞர்கள் உழைக்கின்ற உயிரோட்டமுள்ள அமைப்பாக இளைஞரணி உள்ளது. திமுக இளைஞர் அணி அமைப்பு பிற கட்சிகள் போல சம்பிரதாயத்திற்கு இருக்கும் அமைப்பு அல்ல. சமுதாயத்திற்காக உழைக்கும் அமைப்பு. 30 லட்சம் இளைஞர்களை வழி நடத்திக்கொண்டிருக்கும் தலைவராக இருப்பதால் அமைச்சராவதற்கு எல்லா தகுதிகளும் கொண்டவர் உதயநிதி” என தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.