ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்றுடன் காலாவதி ஆகிறது – ஆளுநர் மவுனம்

ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்று கடைசி நாள் என்பதால் ஆளூநர் இன்றுக்குள் கையெழுத்திட வேண்டும் என்றும் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தும் தமிழக ஆளுநர் அலட்சியம் காட்டுவது நியாயமானது அல்ல என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் ஆளுநர் அரசியல் செய்யாமல் தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஆளுநரும் தமிழக முதல்வரும் ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும் என்றார். மேலும், ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 82 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்து இருப்பதாக வேதனை தெரிவித்த அன்புமணி, தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே காரணம் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதனை அடுத்து ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதாவில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தும் ஆளுநர் குறித்து அன்புமணி ராமதாஸ் ட்வீட் போட்டுள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி இன்றுடன் காலாவதியாகிறது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதல் கிடைக்காததே இந்த நிலைக்கு காரணம்.

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213(2)(ஏ)-இன்படி சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகி விடும். அக்டோபர் 17-ஆம் தேதி சட்டப்பேரவை கூடி இன்றுடன் 6 வாரங்கள் நிறைவடைவதால் அவசரசட்டம் காலாவதியாகிறது

ஆன்லைன் சூதாட்டத் தடை காலாவதியானால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட்டம் மீண்டும் முழுவீச்சில் தொடங்கிவிடும். தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 32 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை மிகவும் அவசியம்!

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் சட்டப்பேரவையில் இயற்றி ஆளுனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆளுனரின் ஐயங்களுக்கும் அரசு தெளிவான பதில் அளித்திருக்கிறது. அதை ஏற்று ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் இன்றைக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.