பல்வேறு கோரிக்கைகள், அரசால் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதில் மசோதா தொடர்பாக நேரில் சந்திக்க நேரம் கேட்டும் ஆளுநர் இன்னும் அழைக்கவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியிருந்தார்.

அதேசமயம், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசரச் சட்டமும் காலாவதியாகிட்டது. இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விமர்சனத்துக்கு ஆளாகாமல் செயல்படுவதுதான் ஆளுநருக்கு அழகு என்று தெரிவித்திருக்கிறார்.

சென்னையில், அமமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை முன்வைத்தனர். அதற்குப் பதிலளித்த தினகரன், “மக்கள் நலனுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்களை அரசாங்கம் கொண்டு வரும்போது அதனை காலம் தாழ்த்தாமல் ஆளுநர் உடனுக்குடன் கையெழுத்திடுவதுதான் மரபு. ஏற்கனவே ஆளுநர் இதுபோல் காலம் தாழ்த்தியது, சில விஷயங்களைக் கிடப்பில் போட்டது என உச்ச நீதிமன்றமே கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதனால் இது போன்ற நிகழ்வுகள் இனி வருங்காலத்தில் வராமல் ஆளுநர் கவனமாகச் செயல்பட வேண்டும். விமர்சனத்துக்கு ஆளாகாமல் செயல்படுவதுதான் ஆளுநருக்கு அழகாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.