புதுச்சேரி: “அரசியலில் இருப்பதைக் காட்டவே புதுச்சேரி அரசு மீது முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டுகிறார். அவர் கூறுவதில் எதுவும் உண்மையில்லை” என்று கல்வியமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கல்வித் துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து இருந்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் புதுச்சேரி கல்வியமைச்சர் நமச்சிவாயம் இன்று கூறியது: “முன்னாள் முதல்வர் நாராயணசாமியும், முன்னாள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணனும் தொடர்ந்து கல்வித்துறை மீது களங்கம் ஏற்படும் வகையில் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். ஒரு சில நிர்வாகம் சம்பந்தமான ஒப்புதல் பெற வேண்டிய காரணத்தால் சில நேரங்களில் காலதாமதம் ஏற்படுகிறது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமியும், முன்னாள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணனும் கடந்த ஆட்சியில் என்ன செய்தார்கள் என்பதை அவர்களின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். கடந்த ஆட்சியில் நானும் அமைச்சராக இருந்துள்ளேன். எதை எல்லாம் செய்துள்ளோம், எதையெல்லாம் செய்யவில்லை என்பது எனக்கே தெரியும். கல்வித்துறையை பொறுத்தவரை ரூ1 கட்டணமாக இருந்த மாணவர் சிறப்பு பேருந்தை இலவச பேருந்தாக மாற்றியுள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து இயக்கப்படும்.
கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கு சீருடையே கொடுக்கவில்லை. அந்த சீருடையை கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு டெண்டர் வைக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்கு ஒரு வாரத்தில் முட்டை தரப்படும்.
நிர்வாக ஒப்புதல் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதே தவிர, திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை. ஆனால், கடந்த ஆட்சியில் நிறைய திட்டங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் சரி செய்து ஒன்றன் பின் ஒன்றாக திட்டங்களை நிறைவேற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கல்வித் துறையில் காலி பணியிடங்களை நிரப்புவது, பதவி உயர்வு கொடுப்பது, பணி நிரந்தரம் செய்வது போன்ற நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம்.
கடந்த ஆட்சியில் இலவச மிதிவண்டி, லேப்டாப் கொடுக்கும் திட்டங்களை நிறுத்திவிட்டனர். ஆனால், இந்த ஆட்சியில் இலவச மிதிவண்டி, லேப்டாப் கொடுப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.1,160 கோடியை கல்வித்துறைக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, அதற்கான அனைத்து பூர்வாங்க பணிகளும் நடைபெற்று வருகிறது. வெகு விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும்.
தற்போதைய ஆட்சியில் ஊழல் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி எப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை. அரசு சிறப்பாக நடைபெறும் வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி தான் அரசியலில் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்வதற்காக குற்றம்சாட்டுகிறார். நாராயணசாமி கூறுவதில் எதுவும் உண்மை இல்லை. தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுகிறது என்று டிசி கொடுப்பதாக புகார் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.