மதுரை: திருமங்கலத்தில் நடந்த சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வரும் 8ம் தேதி கப்பலூர் டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர். செங்கோட்டை முதல் திருமங்கலம் வரையிலான வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பங்கேற்கின்றனர்.
நான்கு வழிச் சாலைகளை பொறுத்தவரையில் 60 கி.மீ தொலைவிற்குள் ஒரு டோல்கேட் இருக்க வேண்டும் என்ற தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் விதிமுறை உள்ளது. இதை மீறி திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட் அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி உள்ளூர் மக்கள், வாகன ஒட்டிகள் கடந்த பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதற்கு தற்போது வரை விடிவு காலம் ஏற்படவில்லை. அதனால், அடிக்கடி கப்பலூர் டோல்கேட்டில் வாகன ஓட்டிகளுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டு துப்பாக்கி சூடு சம்பவம் நடக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது.
மேலும், இப்பகுதி கிராம மக்கள், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ்சில் கூட நோயாளிகளை கொண்டு செல்ல முடியவில்லை. திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார மக்கள், மதுரையில் பல்வேறு நிறுவனங்கள் பணிபுரிகிறார்கள். அவர்கள் டோல்கேட்டை கடக்கும்போது அவர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர்.
ஆட்சிக்கு வந்ததும் அகற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின், கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது இப்பகுதி மக்களிடம் உறுதியளித்து இருந்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு முறை மதுரை வந்துவிட்டார். மக்களும் தொடர்ந்து இந்த டோல்கேட்டை அகற்ற போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தற்போது வரை இந்த டோல்கேட்டை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கட்நத 1ம் தேதி திருமங்கலம் வாகன உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன் மாதாந்திர கட்டமாக ரூ.310 செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து கடந்த 22ம் தேதி கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி திருமங்கலத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் மூர்த்தி தலையீட்டு, பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் திருமங்கலம் பகுதி மக்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என அமைச்சர் உத்தரவிட்டார்.
ஆனால், பொதுமக்களிடம் மீண்டும் டோல்கேட் ஊழியர்கள் பணம் வசூல் செய்கின்றனர். அதனால், நிரந்ரதமாக இந்த டோல்கேட்டை கப்பலூர் பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று திருமங்கலத்தில் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், மதுரை, விருதுநகர் தென்காசி மாவட்டங்கள சேர்ந்த வாகன உரிமையாளர்கள், உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
போராட்டக்குழு நிர்வாகி கண்ணன் கூறுகையில், “அமைச்சர் பி.மூர்த்தி நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையில் வாக்குறுதியளித்த உள்ளூர் வாகன ஓட்டிகளை கூட டோல்கேட் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதனால், வரும் 8ம் தேதி கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவெடுத்து உள்ளோம். இந்த போராட்டத்தில் செங்கோட்டையில் இருந்து திருமங்கலம் வரையிலான டாக்ஸி ஸ்டேண்ட் வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பங்கேற்கின்றனர். அமைச்சர் பேச்சை கூட கேட்காதவர்கள் பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு எங்கு செவி சாய்ப்பார்கள்’’ என்றனர்.