மரக்காணம், ஆலம்பராகோட்டையில் மீன்பிடி துறைமுகம் அமைக்க கோரி இரு மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரதம்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 19 மீனவர் கிராமங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 44 மீனவர் கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த இரண்டு மாவட்டங்களிலும் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை. இதனால் புயல், சூறாவளி காலங்களில் படகுகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.

எனவே விழுப்புரம் மாவட்டத்தில் அழகன்குப்பம் பக்கிங்காம் கால்வாயிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆலம்பராகோட்டை அருகிலும் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க 2 ஆண்டுக்கு முன் அரசு சார்பில் ரூ.236 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு துறைமுகங்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஒரு சில தொண்டு நிறுவனத்தினர் இங்கு துறைமுகம் அமைந்தால் கடல் ஆமைகள் முட்டையிட முடியாது. இதனால் கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் குறையும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் துறைமுகங்கள் அமைப்பதற்கான பணிகள் நிறுத்தப்பட்டு விட்டது.

இந்த பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அனுமந்தை என்ற இடத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.