திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தி திணிப்பு: ராமதாஸ் கண்டனம்!

திருப்பூர் ரயில் நிலையத்தில் சேவை மையம் என்று எழுதப்பட்டிருந்த தமிழ்ப் பெயர் பலகையை நீக்கி விட்டு சகயோக் என்று இந்தியில் பெயர் பலகை வைத்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கு

நிறுவனர்

கண்டனம் தெரிவித்ததோடு மீண்டும் தமிழ்ப் பெயர்ப் பலகையை வைக்க வலியிறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது!

மத்திய அரசு அலுவலகங்களாக இருந்தாலும் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் தொடர்வண்டி நிலையம் போன்ற இடங்களில் உள்ளூர் மொழியான தமிழில் தான் அறிவிப்பு பலகைகள் முதன்மையாக வைக்கப்பட வேண்டும். கூடுதலாக ஆங்கிலம், இந்தியில் வைத்துக் கொள்ளலாம்!

ஆனால், திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் சேவை மையம் என்ற தமிழ் சொற்களால் ஆன பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, சகயோக் என்ற இந்தி சொல் தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்டுள்ளது. இந்தி தெரிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் இது புரியாது. இது புதிய வகை இந்தித் திணிப்பாகும்!

புதிய, புதிய வகைகளில் இந்தியை திணிக்க முயல்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் தொடர்வண்டித்துறை விளையாடக் கூடாது. இந்தியைத் திணிக்கும் இத்தகைய அறிவிப்பு பலகைகள் திருப்பூர் உட்பட எங்கு இருந்தாலும் அவற்றை தொடர்வண்டித் துறை உடனடியாக அகற்ற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஒன்றிய அரசு தனது அமைப்புகள், நிறுவனங்கள் மூலம் பல்வேறு விதங்களில் இந்தி திணிப்பை அரங்கேற்ற முயற்சித்து வருகிறது. ராமதாஸும் அவ்வப்போது கண்டனம் தெரிவித்து வருகிறார்.

கடந்த மாதம் காரைக்கால் வானொலியில் இந்தி நிகழ்ச்சி ஒலிபரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அப்போது அவர், “4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை நிறுத்தி விட்டு, வழக்கம் போல தமிழ் நிகழ்ச்சிகளையே ஒலிபரப்ப வேண்டும். தருமபுரி, நாகர்கோவில் போன்ற மற்ற நிலையங்களுக்கு இந்தி நிகழ்ச்சிகளை நீட்டிப்பதையும் பிரசார் பாரதி கைவிட வேண்டும். இல்லாவிட்டால் காரைக்கால் வானொலி நிலையம் முன், அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பாமக நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

“கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியை திணித்து வரும் மத்திய அரசு, இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது நியாயமற்றது. உள்ளூர் மக்களின் உணர்வுகளை மதித்து, அவர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை வழங்குவது தான் பிரசார்பாரதியின் கடமை ஆகும். அதற்கு மாறாக விருப்பமற்ற நிகழ்ச்சிகளையும், மொழிகளையும் திணிக்கும் போது அது வெறுப்பை ஏற்படுத்தும்” என்று தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்தி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.