பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை; அமைச்சர் காட்டம்.!

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் துவக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, அவரது பாதுகாப்பு ஏற்பாட்டில் குறைப்பாடு இருந்ததாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த ஜூலை மாதம் செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது, அவருக்குப் பாதுகாப்பு தரவேண்டிய பணியில் இருந்து மாநில அரசு தவறிவிட்டது. பல மெட்டல் டிடெக்டர் கருவிகள் வேலை செய்யவில்லை. காவல் துறையினர் பழுதடைந்த கருவிகளை, பெயருக்காக வைத்திருந்தனர். உரிய ஆதாரத்தின் அடிப்படையில், இதை குற்றச்சாட்டாகத் தெரிவித்துள்ளோம்’’ என்று கூறினார்.

இது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியபோது, “பிரதமர் வருகையின்போது, பாதுகாப்பில் குளறுபடிகள் நடந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை. நல்ல முறையில் பாதுகாப்பு இருந்தது. பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு காவல்துறை பயன்படுத்தக்கூடிய அனைத்துவிதமான கருவிகளும், பாதுகாப்பு கருவிகள் உள்பட அனைத்தும் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து, ஏதாவது உபகரணங்கள் காலாவதியாகியிருந்தால், அதனை மாற்றும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. அதுதான் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, இப்போது இருப்பதிலேயே தமிழ்நாடு காவல்துறை வசம்தான் நல்ல தரமான உபகரணங்கள் உள்ளன. அதன் அடிப்படையில், தற்போதுகூட, தமிழ்நாடு காவல்துறையின் இரண்டு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், மோப்ப நாய்களுடன் அந்தமான் சென்றனர். அங்கு பணி முடிந்து, திரும்ப உள்ளனர். அவர்களைத் திரும்பவும் கேரளாவுக்கு அனுப்ப இருக்கிறோம்.

இப்படி அண்டை மாநிலங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை உதவி செய்து கொண்டிருக்கிறது. எனவே அதில் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லை. பழையனவற்றை மாற்றுவதும், புதியவற்றை வாங்குவதும் காலங்காலமாகச் செய்வது. தமிழ்நாடு காவல்துறை வசம் அளவுக்கு அதிகமாகவே உபகரணங்கள் உள்ளன. கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உபகரணங்கள் உள்ளன.

ரெய்டில் சிக்கிய மின்வாரிய முதன்மை பொறியாளர்

அதேநேரம் எதை வைத்திருக்க வேண்டும், எதை களைய வேண்டும் என்ற பயிற்சிக்கான நிலையாணை உள்ளது. அந்த நிலையாணையைத்தான் பின்பற்றுகிறோம். மேலும், பிரதமர் வருகையின்போது, பாதுகாப்பு குறைபாடு என்று எஸ்பிஜியிடம் இருந்து எந்தவிதமான தகவலும், குற்றச்சாட்டும் இல்லை. ரொம்ப சிறப்பாக நடந்து முடிந்ததாகத்தான் வாய்மொழியாக அவர்கள் கூறினர்’’ என்று டிஜிபி கூறினார்.

இந்தநிலையில் இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது டிவிட்டர் பதிவில் கூறும்போது, ‘‘தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு சரியான பாதுகாப்பு வழங்கவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக ஆளும் பல்வேறு பகுதிகளில் சாதாரண மக்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை; தமிழ்நாட்டில் அண்ணாமலை போல வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்களுக்கு கூட பாதுகாப்பு உள்ளது. பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க இந்த அரசுக்கு தெரியாதா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.