ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியிலிருந்து சென்னை நோக்கி, லாரிகளில் செம்மரக்கட்டைகள் கடத்திச்செல்லப்படுவதாக திருப்பதி எஸ்.பி பரமேஸ்வர ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பின்னணியில் மிகப்பெரிய மாஃபியாக்கள் இருப்பதாகவும் ரகசிய தகவலை வெளியிட்ட மர்ம மனிதர் கூறியிருக்கிறார். இதையடுத்து, எஸ்.பி-யின் உத்தரவின்பேரில் ஏ.எஸ்.பி குலசேகர் தலைமையிலான போலீஸ் படையினர், சென்னை நெடுஞ்சாலையிலிருக்கும் ‘ராஜஸ்தான் தாபா’ அருகில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர். அந்த சமயம், அவ்வழியாக முன்னால் ஒரு காரும் அதன் பின்னால் 2 லாரிகளும் வரிசைக்கட்டி வந்தன.

போலீஸாரைக் கண்டதும் அந்த மூன்று வாகனங்களும் அதிவேகத்தில் நிற்காமல் சென்றன. உடனே சுதாரித்துக்கொண்ட போலீஸார் அந்த வாகனங்களை மடக்கிப்பிடிக்க பின்தொடர்ந்து சென்றனர். சுமார் 21 கிலோ மீட்டர் சினிமா பட பாணியில் காவல்துறையினருக்கும், கடத்தல் கும்பலுக்கும் இடையேயான சேஸிங் பரபரக்க வைத்தது. இதையடுத்து, வழிநெடுக அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து, உஷார்ப்படுத்தப்பட்டதால் செம்மரக் கடத்தல் கும்பல் சென்ற 3 வாகனங்களுமே வசமாக சிக்கிக்கொண்டன. கார் மற்றும் 2 லாரிகளிலும் இருந்த 44 பேரையும் கூண்டோடு கைதுசெய்து சிறைப்படுத்தினர்.
சம்பவ இடத்துக்கு எஸ்.பி பரமேஸ்வர ரெட்டி தலைமையிலான அதிரடி படையினரும் விரைந்துச் சென்றனர். பிடிபட்ட 44 பேருடன், செம்மரக்கட்டைகள் இருந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். தமிழக பதிவெண் கொண்ட அந்த லாரிகளிலும் மிக நீளமான 81 செம்மரக்கட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதன் மொத்த எடை 2,632 கிலோ. இவற்றின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.2 கோடி என்கிறார்கள் திருப்பதி போலீஸார். அதுமட்டுமின்றி, மரங்களை வெட்டப் பயன்படுத்திய 11 கோடாரிகள், 32 ரம்பங்களையும் கைப்பற்றினர்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருப்பதி எஸ்.பி பரமேஸ்வர ரெட்டி, ‘‘பிடிபட்ட 44 பேருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதிலும் திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் எனத் தெரியவந்திருக்கிறது. திருப்பதி சேஷாசல வனப்பகுதிக்குள் மரம் வெட்டும் கூலிகளாகத்தான் அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள். மரங்களை வெட்டி லாரிகளில் ஏற்றி, அதிலேயே ஊர்த் திரும்பியிருக்கிறார்கள். இவர்களில் முக்கிய குற்றவாளிகள் யாரும் இல்லை. ஆனாலும், இவர்கள் மீது ஏற்கெனவே வழக்குகள் இருக்கிறதா என்றும் விசாரணை நடத்திவருகிறோம். பின்னணியில் சென்னை, பெங்களூருவைச் சேர்ந்த மாஃபியாக்கள் இருக்கிறார்கள். அவர்களையும் நெருங்குவோம். சேஷாசலத்தின் செல்வங்களை காப்பது நமது கடமை. எந்தச் சூழ்நிலையிலும் அதில் அலட்சியம் காட்ட மாட்டோம்’’ என்றார் எச்சரிக்கை விடுக்கும் விதமாக!