புதுடில்லி, என்.டி.டி.வி., நிறுவனத்தின் பங்குதாரர்களான ஆர்.ஆர்.பி.ஆர்., நிறுவனத்தை, அதானி குழுமம் கையகப்படுத்துவது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், அதன் இயக்குனர் பதவியில் இருந்து ஊடக தொழிலதிபர் பிரணாய் ராய், அவருடைய மனைவி ராதிகா ராய் விலகினர்.
புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், என்.டி.டி.வி., நிறுவனத்தை, பிரணாய் ராய், அவருடைய மனைவி ராதிகா ராய் நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் ௨௯.௧௮ சதவீத பங்குகள், ‘ஆர்.ஆர்.பி.ஆர்., ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்திடம் உள்ளது. இதன் இயக்குனர்களாக பிரணாய் ராய், ராதிகா ராய் இருந்து வந்தனர்.
இந்த நிறுவனம், ‘விஸ்வபிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்திடம் இருந்து, ௪௦௦ கோடி ரூபாய் கடன் வாங்கிஇருந்தது.
இதற்குப் பதிலாக, ஆர்.ஆர்.பி.ஆர்., நிறுவனத்தின் பங்குகளை தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், விஸ்வபிரதான் நிறுவனத்தை, அதானி குழுமம் வாங்கிஉள்ளது.
இதையடுத்து, என்.டி.டி.வி.,யில் உள்ள ஆர்.ஆர்.பி.ஆர்., நிறுவனத்தின் பங்குகள், அதானி குழுமம் வசம் சென்றன.
அதானி குழுமம் பங்குச்சந்தையில் இருந்து என்.டி.டி.வி., நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை வாங்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்.ஆர்.பி.ஆர்., நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து பிரணாய் ராய், ராதிகா ராய் விலகினார்.
அவர்களுக்கு பதிலாக அதானி குழுமத்தின் சார்பில் சுதிப்தா பட்டாசார்யா, சஞ்சய் புகாலியா, செந்தில் சின்னய்யா செங்கல்வராயன் ஆகியோர் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது, தேசிய பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய்க்கு, என்.டி.டி.வி., நிறுவனத்தில், ௩௨.௨௬ சதவீத பங்குகள் உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்