சென்னையில் கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது கனவுத் திட்டமான ‘அம்மா உணவகம்’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட போது முதலில் 207 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக சென்னையில் வார்டு ஒன்றுக்கு தலா 2 உணவகம், அரசு மருத்துவமனைகளில் 7 என மொத்தம் 407 இடங்களில் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 3,500 பேர் பணிபுரிகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கிட்டதட்ட 700 அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது. அம்மா உணவகங்கள் மூலம் சாலை ஓரம் வசிப்பவர்கள், கூலித்தொழிலாளர்கள் என நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பசியாறி வருகின்றனர்.

அம்மா உணவகம் தொடங்கப்பட்ட பின்னர் ஆண்டு வருவாய் ரூ.40 கோடியாக இருந்தது. இது 2018-19ல் ரூ.28 கோடியாகவும், 2019 – 2020ம் நிதியாண்டில் ரூ.23.58 கோடியாகவும், 2021-2022ம் நிதியாண்டில் ரூ.9.88 கோடியாக குறைந்துள்ளது. தி.மு.க ஆட்சி வந்த பின்னர் வருவாய் இழப்பு காரணமாக அம்மா உணவகங்கள் மூடப்படும் என்று பரவலாகக் கருத்துகள் எழுந்தது. ஆனால், இன்றளவிலும் அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை. அம்மா உணவகத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறி, பராமரிப்பு மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் என ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை செலவு செய்யப்படுவதாகவும், ஆனால், வருமானமாக மாதம் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை மட்டுமே கிடைத்து வருவதாக அம்மா உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் கடந்த 29ம் தேதி ரிப்பன் மாளிகையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய மாமன்றக் கணக்குக் குழுத் தலைவர் தனசேகரன், “சென்னையில் அம்மா உணவகங்கள் ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
பல அம்மா உணவகங்களில் தினசரி 500 ரூபாய்க்குக் கீழ் தான் வருமானம் வருகிறது. மக்களிடம் வரவேற்பு இல்லாத பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களை மட்டும் மூட வேண்டும்” என்றார். இதற்கு மேயர் பிரியா, “அம்மா உணவகம் தொடங்கியதிலிருந்து எப்படி செயல்பட்டு வருகிறதோ அதுபோன்று தான் தொடர்ந்து செயல்படும்.

பொதுமக்களிடம் வரவேற்பு இல்லாத அம்மா உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார். இந்தச்சூழலில், நஷ்டக் கணக்கைக் காட்டி அம்மா உணவகத்தை மூட தி.மு.க அரசு முயற்சி மேற்கொள்வதாக அ.தி.மு.க, அ.ம.மு.க கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறுகையில், “அம்மா உணவகத்திற்கு பெயர் மாற்றம் செய்யும் போதும், அம்மா படத்தை மாற்றிய போதும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில், ரூ.786 கோடி வருவாய் இழப்பு என்ற காரணத்தைச் சொல்லி அம்மா உணவகம் திட்டத்தை முடக்கப்பார்க்கிறார்கள். ஏற்கனவே, தாலிக்குத் தங்கம், இலவச ஸ்கூட்டி, இலவச லேப்டாப், மருத்துவ பெட்டகம் திட்டங்களை முடக்கிவிட்டார்கள். இதுபோல முதியோர் ஓய்வூதியத் தொகையையும் சரியாக வழங்குவதில்லை. அம்மா உணவகம் என்பது ஏழைகளுக்கு ஒரு அட்சய பாத்திரம். இந்த திட்டத்தை முடக்க நினைப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே. இதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், “ஏழை, எளிய மக்களின் பசி தீர்ப்பதற்காக அம்மா அவர்கள் கொண்டுவந்த, அம்மா உணவகங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை தி.மு.க அரசு தொடர்ந்து செய்துவருவது கண்டனத்திற்குரியது. அம்மா உணவகங்களால் நஷ்டம் ஏற்படுவதாகச் சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு அறிக்கை கொடுத்திருப்பதும் அதன் ஓர் அங்கம்தான். அம்மா உணவகங்களைத் தொடர்ந்து நடத்துவோம் என்று மேயர் சொன்னாலும் அந்த உணவகங்களை எப்படி அவர்கள் சீரழித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏழை மக்கள் பசியாறுவதைத் தடுக்க நினைத்தால் மக்கள் அதற்கான பாடத்தை தி.மு.க.விற்கு புகட்டுவார்கள்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த கணக்கு குழுத் தலைவர் தனசேகரன், “வருமானம் குறைவாக உள்ள இடங்களில் அம்மா உணவகங்களைக் குறைப்பதற்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம். அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் எங்களுக்கு இல்லை” என்று தெரிவித்தார்.