நூலகங்களில் நூலகர்களை நியமிக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி., கோரிக்கை!

குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்தல், அனைத்து தரப்பினருக்கும் சுய கல்வி மற்றும் முறையான கல்விக்கு துணைநிற்றல், தனிமனித படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் என தகவல், எழுத்தறிவு, கல்வி மற்றும் கலாச்சார கருப்பொருளை மையமாகக் கொண்டு பொது நூலக சேவையானது பல்வேறு இலக்குகளை உள்ளடக்கியதாக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது 4,634 அதிகமான நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், சில நூலகங்களில் நூலகர்கள் இல்லாமல் உள்ளனர். இந்த நிலையில், நூலகர் இல்லா நிரந்தர நூலகங்களில் நூலகர்களை நியமிக்க வேண்டும் என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தபிறகு நூலகங்களுக்குத் தனிக் கவனம் செலுத்தப்படுகிறது. மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் மாபெரும் நூலகம் உருவாக்கப்படுவது அதற்கொரு சான்று. நூல்களை வாசிக்கச் செய்யவேண்டும் என்பதற்காக மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன.

ரவிக்குமார் எம்.பி கடிதம்

இந்நிலையில், தமிழ்நாட்டில் 137 நூலகங்கள் நூலகர் இல்லா நூலகங்களாக உள்ளன ( RC,OA பணியிடம்) . அவற்றில் தினக்கூலி பணியாளர்கள் நூலகர் பணியைச் செய்கின்றனர். அதனால் அந்த நூலகங்கள் போதிய வளர்ச்சி இன்றி நலிவடைந்துள்ளன. அந்த 137 நூலகங்களிலும் மூன்றாம் நிலை நூலகர்களை நிரந்தரமாகப் பணி அமர்த்தம் செய்து அந்த நூலகங்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.