உத்தரகன்னடா, :வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கோகர்ணாவுக்கு, சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.
உத்தரகன்னடாவின் கோகர்ணா பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம். கோவாவை விட, கோகர்ணா வெளிநாட்டு சுற்றுலா பயணியரை அதிகமாக ஈர்க்கிறது.
தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். கொரோனா தொற்று பரவியதால், இரண்டு ஆண்டுகளாக கோகர்ணாவில், சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுலாத்துறைக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
தற்போது தடை உத்தரவு நீக்கப்பட்டதால், சுற்றுலா பயணியர் வருகை ஏறுமுகமாகி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.
ஓம் கடற்கரை, குட்லே கடற்கரை உட்பட மற்ற கடற்கரைகளுக்கு, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரியா, ரஷ்யா, இஸ்ரேல் என பல்வேறு வெளிநாடுகளின் சுற்றுலா பயணியர், வருகின்றனர். சிலர் 20 – 30 ஆண்டுகளாக விடுமுறையை கழிக்க, கோகர்ணாவுக்கு வருவதும் உண்டு.
வெளிநாட்டவரின் பயன்பாட்டுக்காக, கடற்கரைகளில் தற்காலிக ஷெட்டுகள், தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. கோகர்ணாவின், அனைத்து கடற்கரைகளிலும் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
போதுமான பாதுகாப்பும், வசதிகளும் இருப்பதால், வெளிநாட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.
சுற்றுலாத்துறைக்கு வருவாய் கிடைப்பதுடன், இங்குள்ள வியாபாரிகள், விடுதி, ஹோட்டல், கடைகளின் உரிமையாளர்களுக்கும் உதவியாக உள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு நேரத்தில், கோகர்ணாவில் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பலரும் ஏற்கனவே அறைகள் முன் பதிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்