”பொன்னு விளையிற பூமியை விட்டு எங்கே போறது” விளைநிலத்தில் சாலை ஏன்? தஞ்சை விவசாயிகள் வேதனை!

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் பகுதியில் விளை நிலங்களில் மண்ணைப் போட்டு மூடி சாலை அமைக்கும் பணி நடைபெறுவதை விவசாயிகள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்து விடுவதாக கூறியதால், விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.
தஞ்சை மாவட்டம் கண்டியூர், கல்யாணபுரம், ஒன்றாம் சேத்தி, கீழ திருப்பந்துருத்தி உள்ளிட்ட கிராமங்களில் முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் நெல், தென்னை, வெற்றிலை சாகுபடி ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. இந்த செழிப்பான விளை நிலங்களை அழித்துவிட்டு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விளை நிலங்களை அழிக்கக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
image
இந்நிலையில், காட்டுக்கோட்டைபாதை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்து 30ஆம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடித்துவருகிறது. இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்பு கொடியுடன் வயல்களில் இறங்கி வந்து வயலை அழிக்க விடமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து, உடன் இயந்திரங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
image
இதையடுத்து திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையில் வந்த காவல்துறையினர் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அரசு பணியை தடுக்கக் கூடாது மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்து சிறையில் அடைத்து விடுவதாக கூறியதால், விவசாயிகள் ஆத்திரமடைந்து காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பரபரப்பு நிலவியது.
image
ஆனால், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் முதலிய எந்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. நீண்ட நேரத்திற்கு பிறகு விவசாயிகளை அப்புறப்படுத்திவிட்டு புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. சாலை அமைக்கும் பணியாளர்கள் நெற்பயிர்களை வேரோடு பிடுங்கி வீசினர். சம்பாவுக்கு சமாதி கட்டியபடி சாலை அமைக்கும் பணி நடந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
image
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.