
ஆப்கானிஸ்தானின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவராக குல்புதீன் ஹெக்மத்யார் உள்ளார். ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலும், முன்னாள் பிரதமர் குல்புதீன் ஹெக்மத்யார் ஆப்கானிஸ்தானில் தான் உள்ளார்.

இந்நிலையில், ஹெக்மத்யாரும் அவரது ஆதரவாளர்களும் நேற்று கூடியிருந்த மசூதிக்குள், சந்தேகிப்படும் வகையில் பயங்கரவாதிகள் சிலர், பர்தா அணிந்தபடி நுழைந்து ஹெக்மத்யாரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், இருவர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதையடுத்து முன்னாள் பிரதமர் குல்புதீன் ஹெக்மத்யார் வெளியிட்ட வீடியோவில், ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இருவர் காயமடைந்ததாகவும் கூறினார். “எனது நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன், பலமுறை செய்தும் தோல்வியுற்றவர்களால் இங்கே ஒரு தோல்வியுற்ற முயற்சி நடந்தது” என்று கூறினார். தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
“எங்கள் மன உறுதியையோ அல்லது எதிர்ப்பையோ குறைக்க முடியாது… நாங்கள் எங்கள் தேசத்துடன் நிற்போம்” என்று கூறினார். இவர் சோவியத் ஆக்கிரமிப்பு, தலிபானின் முதல் அதிகாரம் மற்றும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை ஆட்சி செய்த மேற்கத்திய ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராகப் போராடினார்.