ஹைதராபாத்,புதுடில்லி மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராகும்படி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு, சி.பி.ஐ., ‘சம்மன்’ அனுப்பியுள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இவரது மகள் கவிதா, தெலுங்கானா மேல்சபை உறுப்பினராக உள்ளார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் புதுடில்லியில், மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில் மதுபானக் கொள்கை மாற்றப்பட்டது.
இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த முறைகேட்டில் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக சமீபத்தில் அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.
மதுபான கொள்கை முறைகேட்டில் கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் அமித் அரோராவுடன், கவிதா பலமுறை தொடர்பு கொண்டு பேசியதாக அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டது.
இது குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
புதிய மதுபான கொள்கை தொடர்பாக, ‘சவுத் குரூப்’ என்றழைக்கப்படும் நிறுவனத்தைச் சேர்ந்த நபர்களிடம், விஜய் நாயர் என்பவர் 100 கோடி ரூபாய் பெற்று, அவற்றை ஆம் ஆத்மி பிரமுகர்களுக்கு கொடுத்து உள்ளார்.
இந்த சவுத் குரூப்பில் கவிதா, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி., ஸ்ரீனிவாசலு ரெட்டி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி கவிதாவுக்கு, சி.பி.ஐ., சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
‘இந்த வழக்கில் உங்களிடம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வரும் 6ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும். விசாரணைக்கான இடத்தை நீங்களே உங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்யலாம்’ என, சம்மனில் கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து கவிதா கூறியதாவது:
விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ.,யிடமிருந்து சம்மன் வந்துள்ளது. ஹைதராபாதில் உள்ள என் வீட்டிலேயே விசாரணை நடத்தலாம் என அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டேன். எந்தவிதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாற்றினாரா சிசோடியா?
புதுடில்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:மதுபான கொள்கை ஊழலில் புதுடில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பின், கடந்த மூன்று மாதங்களில் 14 மொபைல் போன்களை மாற்றியுள்ளார். இதில், ஒரே நாளில் நான்கு மொபைல் போன்களை மாற்றியுள்ளார். ஊழல் தொடர்பாக புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களுடன் மொபைல் போனில் சிசோடியா பேசியுள்ளார். இந்த ஆதாரங்களை அழிப்பதற்காக அவர் மொபைல் போன்களை மாற்றியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்