2022 ம் ஆண்டின் கடைசி சோமவார பிரதோஷம் – கார்த்திகை சோமவாரமும் சங்காபிஷேகமும் ஏன் விசேஷம் தெரியுமா?

சோமவார மகிமைகள்:

பொதுவாக இயற்கை வழிபாட்டில் சூரியனுக்கு இணையாகப் போற்றப்பெறுபவர் சந்திரபகவான். வேதங்கள் சந்திரனை ‘சோமன்’ என்று புகழ்கின்றன. இதனால் இவரது ஆதிக்கத்திற்கு உரிய நாளான திங்கள் கிழமை ‘சோமவாரம்’ எனப்பெறுகின்றது. 

உறுதியான மனநிலையைப் பெறவும்,திடமாகச் செயலாற்றிடவும் சந்திர பகவான் அருள் அவசியம்.

சந்திரன் பலம் குறைந்து இயங்கிடும் காலங்களில் அதீதமான மனச்சோர்வும், குழப்பமும் ஏற்படும்.

இக்காலங்களில் சந்திரபகவான் அருளைப் பெற்றிட அவர் வழிபட்ட தலங்களிலுள்ள சிவபெருமானை வழிபடுதல் சிறப்பாகச் சொல்லப் பெற்றிருக்கின்றது.

சோமவாரமும், சங்காபிஷேகமும்

சந்திரனுக்குரிய  தினங்களான பௌர்ணமி மற்றும் சோமவாரங்களில் சிவபெருமானையும், சிவாலயத்து அம்பிகையையும் வழிபடுவதால் அளப்பரிய நற்பலன்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக அன்றாடம் உற்பத்தியாகி அழியக் கூடிய வெண்ணிற பொருட்களான அன்னம், பால், தயிர் போன்றவற்றிற்கும்,கடலில் தோன்றக்கூடிய உப்பு, முத்து போன்றவைகளுக்கும் சந்திரபகவானே அதிபதியாக ஆகின்றார். இப்பொருட்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாலும், தானமாக அளிப்பதினாலும் சந்திர பகவானின் அருளை எளிதாக  பெறலாம் என்பது ஐதிகம். 

சந்திரனை தமது சென்னியில் ஏற்று, வளர்தலும்,தேய்தலுமாக இருந்திடும்படி அருளி சந்திரசேகரராக பெருமான் காட்சியளித்தது இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் என்பர். 

சங்காபிஷேகம் ஏன்?

சந்திரனுக்குரிய கடல் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் பொருட்கள் அவரது ஆதிக்கத்திற்கு உட்பட்டவையே. தண்ணீர் ராசியான கடகம் சந்திரனுக்குரிய‌ ராசியாகும். விருச்சிகம்  நீச்ச ராசியாகும்‌. 

எனவே, விருச்சிக மாதமான கார்த்திகை மாதத்தில் சங்காபிஷேகம் செய்வது சிறப்பானதாக அமைகின்றது. 

பொதுவாக சங்கு என்பது பூஜிக்கத்தக்க பொருள். இயற்கையாக கடல்நீரில்  விளைவது.  திருமகளுக்கு ஒப்பானது. புனிதமானது.

இல்லங்களில் சங்கினை பாலபிஷேகம் செய்து பூஜித்து வர லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். 

சோமவாரமும், சங்காபிஷேகமும்

செல்வ விருத்தி ஏற்படும். சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். சங்கில் படும் சாதாரண தண்ணீர்கூட கங்கை நதிநீருக்கு ஒப்பானதாக மாறிவிடுகின்றது என்பது சாஸ்திரம்.

இத்தகு பூஜிக்கத்தக்க சங்கில் நீரினை நிரப்பி அதனைக் கொண்டு பெருமானை அபிஷேகிப்பது கங்கை நீரினால் அபிஷேகம் செய்வதற்குச் சமமாகும். இவ்வகையில், திருமஞ்சனப் பிரியரான சிவபெருமானுக்கு 108 மற்றும் 1008 போன்ற எண்ணிக்கையில் சங்கு தீர்த்தங்களைக் கொண்டு  அபிஷேகம் செய்வது அளப்பறிய புண்ணிய பலன்களை அள்ளித் தரும்.

சோமவார பிரதோஷம்

பரமேஸ்வரன் விஷம் உண்டது ஏகாதசி நாளில் . பள்ளி கொண்டது துவாதசியில். உலகமெலாம் உய்வுறத் தாண்டவமாடியது திரயோதசி நாளில். அதுவும் அந்திசாயும் நேரத்தில். இந்தக் காலத்தைத்தான் பிரதோஷக்காலம் என்கிறோம்.

பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

பிரதோஷம்

சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம்தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் ஒடுங்க அதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் சிவன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாகவும்,

இந்நாளில் சிவனைத் தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும் என்பது ஐதிகம். 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகிவிடுவார்கள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

சோமவார பிரதோஷநாளில் இருக்கும் விரதம் பன்மடங்கு பலன்களைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. நாள் முழுக்க நீர் ஆகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க வேண்டும்.

மாலை சிவன் கோயிலுக்குச் சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி, ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம்புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்

அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்.

சிவபெருமானுக்கும், நந்திக்கும் தூய பசும்பால் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம். கொண்டக்கடலை எலுமிச்சை சாதமோ தயிர்ச்சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குக் கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கும். முன்னேற்றம் கிடைக்கும்.

பிரதோஷ காலத்தில் காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்ப்பிப்பது மிகவும் சிறப்பானது. இந்த ஆண்டின் கடைசி சோமவார பிரதோஷம் நாளை ( 05.12.22) வருகிறது. எனவே இந்நாளில் தவறாமல் ஈசனை வழிபட்டு வளம் பெறலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.