பவானிசாகர் அணை நீர்மட்டம்: ஈரோடு மக்களுக்கு வந்தது முக்கியத் தகவல்…!

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. இதன் மொத்த கொள்ளளவு 105 அடி. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழையின் அளவை பொறுத்து அணைக்கு செல்லும் நீரின் அளவு மாறுபடும். கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வந்தது.

நீர்மட்டம் திடீரென சரிவு

இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையொட்டி படிப்படியாக நீர்மட்டமும் உயர்ந்தது. இது ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் நீலகிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு திடீரென குறைந்துவிட்டது. இது பவானி ஆற்றில் செல்லும் நீரின் அளவை குறைத்தது.

பவானிசாகர் அணை நிலவரம்

இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியது. அணையின் நீர்மட்டமும் குறைந்துள்ளது. இன்று (டிசம்பர் 4) காலை நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.17 அடியாக இருக்கிறது. நேற்று வினாடிக்கு 2,712 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் இன்று அணைக்கு வினாடிக்கு 712 கன அடியாக தடாலடியாக குறைந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,200 கன அடி நீரும், தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி நீரும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் 2,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நடப்பு பருவமழை காலம் போதிய அளவு மழைப்பொழிவை அளித்ததால் அடுத்து வரும் கோடைக்காலம் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற்பகலில் நல்ல மழை

ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கோபிசெட்டிபாளையம், பவானி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதியில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் பிற்பகல் வேளையில் லேசான சாரலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. ஒரு சில இடங்களில் கனமழையும் வெளுத்து வாங்கியதை பார்க்க முடிந்தது.

மீண்டும் சூழும் கருமேகங்கள்

குறிப்பாக சத்தியமங்கலம், ஈரோடு, பவானி உள்ளிட்ட பகுதியில் சுமார் அரை மணி நேரம் விடாமல் மழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. நல்ல மழையால் பொதுமக்கள் வெளியேறாமல் சிறிது நேரம் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். மழையால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே உள்ள கடையோரங்களில், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

இதற்கிடையில் வானத்தில் கருமேகக் கூட்டம் சூழ்ந்து வருவதால் மீண்டும் ஒரு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது ஈரோடு, மொடக்குறிச்சி, அந்தியூர், சத்தியமங்கலம், பவானி, கோபி உள்ளிட்ட இடங்களில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.