உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 அமைப்பின் தலைவர் பொறுப்பு இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் இந்தோனேசிய அதிபர் கையால் பிரதமர் மோடி தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இதன்படி இந்தியா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறைப்படி தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. இந்த தலைமை பொறுப்பில் இந்தியா அடுத்த ஓராண்டுக்கு இருக்கும்.
ஜி 20 உச்சி மாநாட்டின் அடுத்த கூட்டம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். இந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமிக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் நாளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் என்பதால் இந்த கூட்டத்தில் பழனிச்சாமி பங்கேற்பாரா என்பது சந்தேகமாக உள்ளது. இருப்பினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து வெளியாகவில்லை. பழனிச்சாமிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய பாஜக அரசின் இத்தகைய அழைப்பு ஓபிஎஸ் அணியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.