மும்பையில் ஒரு டிராவல் ஏஜென்சியை நடத்தி வரும் அதுல் என்பவர் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர். சில மாதங்களுக்கு முன்பு இரட்டை சகோதரிகளும் அவர்களது தாயும் ஒரு விபத்தில் சிக்கிய நிலையில், நிலைமையை சமாளிக்க சகோதரிகளுக்கு அதுல் உதவியுள்ளார். இதனால், ஈரு குடும்பங்களுக்கு இடையில் நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சகோதரிகளில் ஒருவர் அந்த நபருடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தனது இரட்டை சகோதரியையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதித்தார். இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால், திருமணம் நடைபெற்றது. கடந்த 2-ம் தேதி சோலாப்பூரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது இரட்டை சகோதரிகள் பிங்கியும் ரிங்கியும் மணமகன் அதுலுக்கு மாலை அணிவிக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
இந்த திருமணம் குறித்து இளைஞரின் உறவினர் ஒருவர் கூறுகையில், இரட்டை சகோதரிகள் சிறுவயதில் இருந்தே அனைத்தையும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஒரே கல்லூரியில் படித்தனர். ஒரே ஐடி நிறுவனத்தில் வேலையும் செய்து வருகின்றனர். திருமணம் காரணமாக, இருவரும் பிரிந்து செல்வதை அவர்களால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அதனால், இருவரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென இரட்டை சகோதரிகள் விரும்பியதாக கூறினார்.
வெள்ளிக்கிழமை, 300 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் முன்னிலையில், வழக்கத்திற்கு மாறான ” அதிசய திருமணம்” நடந்த செய்தி மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபருடன் சகோதரிகள் திருமண மாலைகளை பரிமாறிக்கொண்ட வீடியோக்கள் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த இரட்டை தொழில்நுட்ப சகோதரிகளை திருமணம் செய்ததற்காக கோலாப்பூரை சேர்ந்த 36 வயது நபர் மீது சோலாப்பூர் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.