திருப்பதி ;திருப்பதி வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, மலை அடிவாரத்தில் உள்ள கோமந்திர் பசு வழிபாட்டு நிலையத்தில், பசுவின் எடைக்கு எடை தீவன துலாபார காணிக்கை செலுத்தி வழிபட்டார்.
நேற்று முன்தினம் இரவு திருமலை வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, நேற்று காலையில் திருமலை ஏழுமலையானை வழிபட்டார்.
இதையடுத்து, திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ‘கோமந்திர்’ என அழைக்கப்படும் தேவஸ்தானத்தின் பசு வழிபாட்டு நிலையத்திற்கு அவர் சென்றார்.
அங்கு அவரை கோமந்திர் நன்கொடையாளரும், தமிழ்நாடு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் ஆலோசனைக்குழு தலைவருமான ஜெ.சேகர் வரவேற்றார்.
திருமலை தேவஸ்தான அறக்கட்டளை தலைவர் சுப்பா ரெட்டி மற்றும் செயல் அலுவலர் தர்மா ரெட்டி ஆகியோரும் உடன் இருந்து ஜனாதிபதியை வரவேற்றனர்.
இங்கு, ஜனாதிபதி முர்மு ஒரு பசுவின் எடைக்கு சமமான 435 கிலோ கால்நடை தீவனத்தை காணிக்கையாக சமர்ப்பித்தார்.
பின், பசுக்களுக்கு உணவு வழங்கி வழிபாடு நடத்திய அவர் 435 கிலோ கால்நடை தீவனத்திற்கான கட்டணம் 6,000 ரூபாயை தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினார்.
ஏழுமலையான் வழிபாடு
நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு வந்த ஜனாதிபதி முர்முவை, ஆந்திர அரசு சார்பில் துணை முதல்வர் நாராயண சுவாமி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.இரவு திருமலையில் தங்கிய அவர் நேற்று காலை ஏழுமலையானை தரிசித்தார். இதையடுத்து, அவரை தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து, வேத ஆசீர்வாதம் செய்வித்து, லட்டு, தீர்த்தம், வடை உள்ளிட்ட பிரசாதங்களுடன், ஏழுமலையான் மற்றும் பத்மாவதி தாயார் திருவுருவப்படங்களையும் அவருக்கு அளித்தனர்.பின், திருச்சானுார் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்த அவர், திருப்பதி பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று புதுடில்லி திரும்பினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement