ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி காணப்படுகிறது. இங்கு மழை பெய்வதும், பின்னர் மழைப்பொழிவு பொய்ப்பதும் என நிலையற்றத் தன்மை இருந்து வருகிறது. இது பவானிசாகர் அணையிலும் எதிரொலித்து கொண்டிருக்கிறது. ஒருநாள் நீர்வரத்து அதிகரித்தும், மற்றொரு நாள் நீர்வரத்து குறைந்தும் வருகிறது.
பவானிசாகர் அணை நீர்மட்டம்
இருப்பினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 104 அடியில் நீடித்து வருகிறது. இன்று (டிசம்பர் 6) காலை நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,743 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் வழியாக 2,200 கன அடி நீரும், தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி நீரும், குடிநீருக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் என மொத்தம் 2,700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றம்
தற்போது அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு மாவட்டத்தின் மற்ற பிரதான அணைகளாக இருக்கும் குண்டேரிபள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 41.75 அடியிலும், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 30.84 அடியிலும்,
அணை அமைந்துள்ள பகுதி
வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியிலும் தொடர்ந்து நீடித்து வருகின்றன. பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவு 105 அடி ஆகும். நீர் இருப்பு 32.8 டி.எம்.சி. சுமார் 2.07 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆறு, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு ஆகிய இரண்டு கலக்கும் இடத்தில் அணை கட்டப்பட்டுள்ளது.
கீழ் பவானி கால்வாய் திட்டம்
இது கடந்த 1956ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த அணையை கொண்டு கீழ் பவானி கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டம் வளமிக்கதாக காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இதற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை. ஆசியாவின் மிக நீளமான மண் அணை.
இந்த அணையில் இரண்டு நீர்மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. நுண்புனல் மின் நிலையத்தில் 8 மெகாவாட் திறனும், வலதுகரை வாய்க்கால் மின் நிலையத்தில் 8 மெகாவாட் திறனும் என 16 மெகாவாட் முன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.