டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவு | பாஜக, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பநிலை நிலவரப்படி பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் பல்வேறு கருத்துக் கணிப்புகளும் சுட்டிக்காட்டியபடி ஆம் ஆத்மி டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுமா இல்லை பாஜக தக்கவைக்குமா என்ற பரபரப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தை தொற்றியுள்ளது.

டெல்லியில் உள்ள மொத்தம் 250 வார்டு உறுப்பினர்கள் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் இதில் போட்டியிட்டனர். ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் 250 வார்டுகளிலும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. ஆனால் காங்கிரஸ் 247 வார்டுகளில் மட்டுமே தனது வேட்பாளர்களை நிறுத்தியது

இந்நிலையில் இன்று காலை 8 மணி தொடங்கி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 43 மையங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆரம்பநிலை போக்கின்படி பாஜக, ஆம் ஆத்மி இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது. நெக் டூ நெக் என்றளவில் போட்டி நிலவுகிறது. 126 வார்டுகளைக் கைப்பற்றும் கட்சி டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றும். சற்று முன்னர் கிடைத்த நிலவரத்தின்படி ஆம் ஆத்மி 127 வார்டுகளிலும், பாஜக 106 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்தத் தேர்தலுக்கு தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதுபோல் காங்கிரஸ் வெறும் 7 வார்டுகளில் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சூழலில் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகம் பொலிவிழந்து காணப்படுகிறது.

கருத்துக் கணிப்பு கைகொடுக்குமா? முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநகராட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநகராட்சித் தேர்தல், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் இந்தத் தேரதல் முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அரசியல் கட்சியாக உருவெடுத்து அண்மையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆம் ஆத்மிக்கு இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது அவசியமானதாக இருக்கிறது. பாஜகவுக்கும் டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றுவது கவுரவ பிரச்சினையாக உள்ளது. இந்தச் சூழலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் குஜராத் மற்றும் இமாச்சல சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

காலை 10.30 மணி நிலவரம்:

கட்சிகள் பாஜக ஆம் ஆத்மி காங்கிரஸ்
முன்னிலை 106 வார்டுகள் 127 வார்டுகள் 11 வார்டுகள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.