தெ.கொரிய திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா

பியாங்யாங்: தென் கொரிய நாட்டு திரைப்படத்தைப் பார்த்ததற்காக தனது நாட்டுச் சிறுவர்கள் இருவரை பொதுமக்கள் முன்னிலையில் வட கொரியா சுட்டு வீழ்த்திய தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியா, தென் கொரிய சர்ச்சை கொரிய போர் முடிவுக்கு வந்தும் முடியாமல் தொடர்கிறது. இருநாடுகளும் இரு துருவங்களாக செயல்படுகின்றன.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் வட கொரிய நாட்டைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தென் கொரிய நாட்டு திரைப்படத்தைப் பார்த்துள்ளனர். இதற்குத் தண்டனையாக அந்த இரு சிறார்களும் ஹைசான் விமானப்படை தளத்தில் மக்கள் முன்னிலையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். இது குறித்து அரசாங்கம் விடுத்த எச்சரிக்கையில், “தென் கொரிய நாட்டின் திரைப்படங்களை, நாடகங்களை பார்ப்பவர்கள், பரப்புபவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக வட கொரியா தம் மக்களுக்கு புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு வெடிகுண்டு, துப்பாக்கி, செயற்கைக்கோள் என்றெல்லாம் பெயர் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கொரியா ஏன் பிரிந்து கிடக்கிறது? ஒன்றுபட்ட கொரியாவை ஜப்பான் தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு,1945-ல் ஒன்றுபட்ட கொரியா விடுதலை பெற்றது. ஆனால் அதன் பின்னர் வட பகுதி கொரியாவில் சோவியத் நாடும், தென் பகுதி கொரியாவில் அமெரிக்காவும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தின. இரு ஆதிக்க நாடுகள் இடையிலான பனிப்போர், கொரியாவில் பெரும் சண்டையாக வெடித்தது.1950ல் தொடங்கிய கொரியப் போர் மூன்று வருடங்கள் நீடித்தது. 1953-ல் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாக வட கொரியா மற்றும் தென் கொரியா என இரண்டு நாடுகள் உருவானது. ஆனால், போர் நிறுத்தத்தின்போது எந்த அமைதி ஒப்பந்தமும் ஏற்படவில்லை. அதனால் அப்போதிலிருந்தே இரு நாடுகள் இடையே பிரசசினைகள் நிலவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.