புதுடெல்லி: ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்ற பிறகு, அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு நடத்தியுள்ளது. இதில் எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.
குறிப்பாக திமுக தலைவரான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஏனெனில், எதிர்க்கட்சிகள் ஆளும் இந்த மாநிலங்களின் முதல்வர்களையும் கட்டாயமாக வரவழைத்து கூட்டம் நடத்தியதை தனது சாதனையாக பாஜக கருதுகிறது. இதற்கு ஏதுவாக, அக்கூட்டத்திற்கு அழைக்கப்படும் தலைவர்தான் வரவேண்டுமே தவிர அவர் சார்பில் வேறு எவரையும் அனுப்பி வைக்கக் கூடாது என நிர்ப்பந்தம் தரப்பட்டது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த பிரதமர் மோடி, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் இணக்கமாக பேசினார்.
அடுத்தடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஜி20 தொடர்பான கூட்டங்களை சுமூகமாக நடத்தும் வகையில் பிரதமரின் போக்கு இருந்தது. மேலும் இந்தக் கூட்டம் வழக்கமான அனைத்துக் கட்சி கூட்டம் போல் இல்லை. சர்வதேச நாடுகளின் முன் மத்திய அரசின் ஒரு அதிகாரப்பூர்வமான தேசியக் கூட்டமாகவே இருந்தது. இதற்கு ஏற்ற வகையில், கலந்துகொண்ட 15 கட்சித் தலைவர்களும் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பவில்லை.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மட்டும் ஆதரவுப் போக்கிலிருந்து சற்று விலகிப் பேசினர். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேகூறும்போது, “சர்வதேச அமைப்புகளுக்கு இந்தியா தலைமை ஏற்பதுஇது முதன்முறையல்ல. 1983-ல்அணிசேரா இயக்க மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. மறுஆண்டு காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்” என்றார்.
ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடியை பாராட்டியதுடன், தங்கள் மாநிலத்தின் சார்பில் முழு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் குறுக்கிட்ட முதல்வர் மம்தா, “இது வெறும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கானது அல்ல. மாறாக, நாடு முழுவதுக்குமானது’ என்றார்.
இதுபோன்ற செயல்பாடுகளின் பின்னணியில், பாஜக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளுக்கு அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி இல்லாமல் இல்லை. இதன்படி, நாட்டின் ஒற்றுமை விவகாரத்தில் தங்கள் ஆதரவு பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு இருப்பதாக, திமுக, டிஎம்சி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் காட்டுகின்றன.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். ராஷ்ட்ரிய ஜனதா தளமும் இக்கூட்டத்தை புறக்கணித்து தனது அதிருப்தியை காட்டியுள்ளது.
ஜி20 தலைமையின் மூலம் இந்தியாவை சர்வதேச அளவில் பலம் வாய்ந்ததாகக் காட்டும் வாய்ப்பு பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது. அதேசமயம், இதன் பலனை தமது கட்சியான பாஜகவுக்கு, 2024 மக்களவைத் தேர்தலில் பெற வைக்கும் முயற்சி இயற்கையாகவே அமைந்து விட்டது.